பளிச்சிடும் வண்ணத்தில் லிப்ஸ்டிக்; மேயருக்கு 'டஃப்' கொடுத்த தபேதார்; மணலிக்கு துாக்கியடித்த மாநகராட்சி!
பளிச்சிடும் வண்ணத்தில் லிப்ஸ்டிக்; மேயருக்கு 'டஃப்' கொடுத்த தபேதார்; மணலிக்கு துாக்கியடித்த மாநகராட்சி!
ADDED : செப் 25, 2024 09:54 AM

சென்னை: லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு பணிக்கு வந்ததால் சென்னை மேயரின் தபேதார் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
தலைநகர் அரசியல்
அரசியல் களத்தில் சென்னைக்கு என்று தனிபார்வை உண்டு. சாதாரண அரசியல்வாதிகள், முதல் பெரும் அமைச்சர்கள் வரை கரை வேட்டி கட்டிக் கொண்டு சென்னை சென்று வருகிறேன் என்றால் இன்னமும் கிராமப்புறங்களில் ஆச்சரியமாக பார்ப்பார்கள். சென்னை அரசியலின் சுவாசம் அப்படியானது, அலாதியானது மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்தது,
மணலிக்கு மாற்றம்
அப்படிப்பட்ட தலைநகர் சென்னையில் மேயரின் பெண் தபேதார் அதிரடியாக மணலிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான காரணம் தான் வினோதமானதாக பார்க்கப்படுகிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:
லிப்ஸ்டிக் காரணம்
சென்னை மேயர் ப்ரியாவின் டபேதாராக இருந்தவர் மாதவி (50). மேயர் செல்லும் இடங்களில் அரசு சம்பந்தமாக கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் இவரை கட்டாயம் பார்க்கலாம். அதற்கு ஒரு காரணமும் உண்டு. எப்போதும் தபேதார் சீருடையில் இருக்கும் அவர் தமது உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டதாக தெரிகிறது.
அழகி போட்டி
எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் நல திட்ட நிகழ்ச்சிகள் என எங்கும் எந்நேரமும் பரபரப்புடன் மேயர் ப்ரியா செல்லும் போது அவரது முன்னே மாதவியும் அதே லிப்ஸ்டிக் பூசி பந்தாவாக சென்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மகளிர் தினத்தின் போது ரிப்பன் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேஷன் ஷோவில் மாதவி கலந்து கொண்டது பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளதோடு விமர்சனங்களை எழுப்பியதாகவும் தெரிகிறது.
கண்டிப்பு
அவரின் இதுபோன்ற நடவடிக்கைகளை அறிந்த மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர் என்பவர் மாதவியை அழைத்து விவரம் கேட்டுள்ளார். உதட்டுக்கு சாயம் பூசிக் கொண்டு வருவது கூடாது என்றும் அவர் கண்டித்துள்ளார். ஆனால் தனி உதவியாளரின் பேச்சை கேளாமல் மாதவி உதட்டுச்சாயத்துடன் உலா வந்ததாக தெரிகிறது.
மெமோ
இதையடுத்து, அவர் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி, ஆகஸ்ட் 6ம் தேதி மெமோவும் வழங்கப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படியவில்லை, என்ன காரணம் என்று கூறுமாறு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த தபேதார் மாதவி, இது போன்ற அறிவுறுத்தல்கள் மனித உரிமைக்கு எதிரானது. யாரிடமும் பேசக்கூடாது, உதட்டுச்சாயம் அணியக்கூடாது என்று எந்த அரசாங்க உத்தரவும் இல்லை. அதுபோன்ற உத்தரவுகள் இருந்தால் காட்டுங்கள் என்று கூறி உள்ளார். அதையே தமது விளக்கமாகவும் மேயரின் உதவியாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
கவனம்
மாதவியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, அவரை உடனடியாக மணலிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஒரு உதட்டுச்சாயம் பணியிட மாற்றம் வரை சென்றுவிட்டதே என்று பேச்சுகள் பெரிதாக மேயர் ப்ரியா தரப்பின் கவனத்துக்கும் சென்றது.
தோற்றம்
இது குறித்து அவர் தரப்பில் விசாரித்தபோது தெரியவந்த தகவல்கள் வருமாறு; மகளிர் தினம் கொண்டாட்டத்தின் போது பேஷன் ஷோவில் மாதவி கலந்து கொண்ட விதம், நடை, உடை பாவனைகள், தோற்றம் குறித்து பலரும் விமர்சித்தனர். அதுமட்டும் அல்லாமல் அவர் அணியும் உதட்டுச்சாயம் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்புவதாக உள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் வந்து செல்லும் ரிப்பன் மாளிகையில் இப்படி ஒரு தோற்றத்துடன் இருப்பது சரியில்லை என்று என உதவியாளர் மாதவியிடம் கூறி இருக்கிறார். அதற்கும், பணியிட மாற்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
அணிய வேண்டாம்
ஆனால் தபேதார் மாதவியின் விளக்கம் வேறுமாதிரியாக உள்ளது. மேயரின் உதவியாளர்கள் என்னிடம் உதட்டுச்சாயம் பளபளப்பாக இருக்கிறது, அதன் அளவை குறைக்கவும், கண்கள் கூசும் அளவுக்கு மின்னும் புடவைகள் அணிய வேண்டாம் என்று கூறிக் கொண்டு இருந்துள்ளனர் என்று கூறி இருக்கிறார்.
மாதவி, சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் என்பது குறிப்பிடத்தக்கது