ADDED : நவ 29, 2024 12:06 AM
மைசூரு; கோழிகள் அசுத்தம் செய்ததால், பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஒருவரின் கொலையில் முடிந்தது.
மைசூரு, டி.நரசிபுராவின் தொட்டேபாகிலு கிராமத்தில் வசிப்பவர் நஞ்சம்மா. இவரது வீட்டு கோழிகள், இதே பகுதியில் வசிக்கும் சித்தம்மா என்பவரின் வீட்டு முன், அசுத்தம் செய்தன. இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடப்பது வழக்கம்.
நேற்று காலையும், கோழி அசுத்தம் செய்தது தொடர்பாக சித்தம்மாவும், அவரது மகள் ராஜம்மாவும், நஞ்சம்மாவுடன் தகராறு செய்தனர். இதை பார்த்த நஞ்சம்மாவின் உறவினர் மஹாதேவசாமியின் மனைவி சசிகலா, இரு பெண்களின் சண்டையை விலக்கி விட முயற்சித்தார். அப்போது கோபமடைந்த ராஜம்மாவும், சித்தம்மாவும் அவரது தலைமுடியை பிடித்திழுத்து தாக்கினர்; செங்கல்லை எடுத்து தலையில் தாக்கினர். இதனால், அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த மஹாதேவசாமி, அவர்களின் சண்டையை விலக்க வந்தார். அப்போது ராஜம்மாவும், சித்தம்மாவும் மஹாதேவசாமியை கடுமையாக தாக்கினர்; மர்ம உறுப்பில் ஓங்கி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக, டி.நரசிபுரா போலீஸ் நிலைய போலீசார், ராஜம்மா, சித்தம்மாவை கைது செய்தனர்.

