கேரள மாநிலத்திற்கு வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர்
கேரள மாநிலத்திற்கு வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர்
ADDED : மார் 02, 2026 01:33 AM

புதுடில்லி: கேரள சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, வரும் 6, 7ல், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
தமிழகத்துடன் சேர்த்து மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த மாநிலங்களில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி முடிந்து இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகி விட்டது. கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு வந்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, வரும் 6, 7ல், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அம்மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாகவும், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகவும் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

