விடுமுறையில் பணியாற்ற வக்கீல்கள் விரும்புவதில்லை: தலைமை நீதிபதி ஆதங்கம்
விடுமுறையில் பணியாற்ற வக்கீல்கள் விரும்புவதில்லை: தலைமை நீதிபதி ஆதங்கம்
ADDED : மே 22, 2025 12:49 AM

புதுடில்லி: 'விடுமுறை காலத்தில் வேலை செய்ய வழக்கறிஞர்கள் விரும்புவதில்லை; ஆனால், வழக்குகள் தேங்கினால் மட்டும் நீதித்துறையையும், நீதிபதிகளையும் குற்றஞ்சாட்டுகின்றனர்' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம்,உயர் நீதிமன்றங்களுக்கு ஆண்டு தோறும் விடுமுறை காலம் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த சமயங்களில் குறைவான நீதிபதிகளுடன் விடுமுறை கால அமர்வு செயல்படும்.
உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை, இரண்டு அமர்வு மட்டுமே செயல்படுவது வழக்கம். அதிலும், மூத்த நீதிபதிகள் இடம் பெறுவது கிடையாது. அந்த நடைமுறையை தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மாற்றியுள்ளார்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், மே 26 முதல் ஜூலை 13 வரை 'பகுதி நீதிமன்ற வேலை நாட்கள்' என வேறு பெயரிட்டதோடு, ஐந்து அமர்வுகள் வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமர்வுகளுக்கு தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் தலைமை வகிப்பர் எனவும் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்களின் அலுவல் பணிகள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இருக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு முன் நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அதில் ஆஜரான வழக்கறிஞர், 'மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கு பின் பட்டியலிட வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ''விடுமுறை காலத்தில் வேலை பார்ப்பதற்கு வழக்கறிஞர்கள் விரும்புவதில்லை. ஆனால், வழக்குகள் தேங்குவதற்கு நீதித்துறையையும், நீதிபதிகளையும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
''கோடை விடுமுறை முழுதும், தலைமை நீதிபதி துவங்கி முதல் ஐந்து நீதிபதிகள் தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.
''ஆனாலும், வழக்குகள் நிலுவைக்கு, நாங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. உண்மையில், விடுமுறை நாட்களில் வேலை செய்ய விரும்பாதவர்கள், வழக்கறிஞர்கள் தான்,'' என கடுமையாக விமர்சித்தார்.