தேர்தல் கமிஷனர் நியமனச் சட்ட வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
தேர்தல் கமிஷனர் நியமனச் சட்ட வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
ADDED : டிச 03, 2024 06:45 PM

புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான மத்திய அரசின் சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விலகிக் கொண்டார்.
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு தேர்வு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத் திருத்த மசோதா 2023ஐ மத்திய அரசு இயற்றியது. இதன்படி அமைக்கப்பட்ட குழுவில் தலைமை நீதிபதி சேர்க்கப்படவில்லை. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. சட்டத்திற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சஞ்சீவ் கன்னா தற்போது தலைமை நீதிபதியாக உள்ளார். இதனால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக கூறியுள்ளார். இந்த வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு முன் பட்டியலிடப்பட்டு, அடுத்தாண்டு ஜன.,6ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.