ரூ.14,000 கோடி நிதி பற்றாக்குறை மேல்சபையில் முதல்வர் ஒப்புதல்
ரூ.14,000 கோடி நிதி பற்றாக்குறை மேல்சபையில் முதல்வர் ஒப்புதல்
ADDED : டிச 13, 2024 05:29 AM

பெலகாவி: ''மாநிலத்தில் முதன் முறையாக, நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தேவையற்ற செலவை குறைத்து, நிதி பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
நல்லாட்சி
மேல்சபை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் திப்பேசாமி கேள்விக்கு பதிலளித்து, நிதி அமைச்சருமான முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
மாநிலத்தில் முதன் முறையாக, 14,000 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை ஏற்படுள்ளது. வரும் நாட்களில் தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம், நிதி பற்றாக்குறை சரி செய்யப்படும்.
இதற்கு முன் நான் ஐந்து ஆண்டுகள் முதல்வராக இருந்த போது, ஒரு முறை கூட நிதி பற்றாக்குறை ஏற்பட்டது இல்லை. இம்முறை 14,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பொருளாதார சூழ்நிலை ஆரோக்கியமாக இருந்தால் மட்டும், ஆட்சி நல்ல முறையில் நடக்கும்.
பொருளாதார நெருக்கடி இருந்தாலும், மத்திய அரசின் விதிமுறைப்படியே, நமது கடன் அளவு உள்ளது. 2024 - 25 ல், 3.70 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு பட்ஜெட் தாக்கல் செய்தோம்.
இதில் 1.20 லட்சம் கோடி ரூபாயை வளர்ச்சி பணிகளுக்கு வழங்கினோம். வளர்ச்சி பணிகள் நின்றுள்ளதாக, எதிர்க்கட்சியினர் தேவையின்றி குற்றம்சாட்டுகின்றனர். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.
வரைமுறை
அரசின் கருவூலம் காலியானதாக, எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை. நாங்கள் வாக்குறுதி திட்டங்களுக்கு, எவ்வளவு நிதி ஒதுக்கினோமோ, அதே அளவுக்கு வளர்ச்சி பணிகளுக்கும் வழங்கினோம்.
வளர்ச்சி பணிகளுக்கு பணம் செலவிட்டே ஆக வேண்டும். இது, அனைவருக்கும் தெரிந்த விஷயம். எங்கள் அரசு வந்த பின், 1.20 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றோம். கடந்தாண்டு 95,000 கோடி ரூபாய் கடன் இருந்தது. எந்த மாநிலங்கள் எவ்வளவு கடன் பெறலாம் என, மத்திய அரசு வரைமுறை வகுத்துள்ளது. அதன்படியே எங்கள் அரசு கடன் பெற்றுள்ளது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் கடன் அளவு மிகவும் குறைவாக உள்ளது. மத்திய அரசின் விதிமுறையை தாண்டி, நாங்கள் கடன் பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி: வாக்குறுதி திட்டங்களுக்கு, 52,000 கோடி ரூபாய் வழங்கியுள்ளீர்கள். இதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால் எஸ்.சி., - எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 14,000 கோடி ரூபாயை, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தினீர்கள்.
வளர்ச்சி பணிகள் நிறுத்தப்பட்டதாக, நாங்கள் யாரும் கூறவில்லை. 'தொகுதி வளர்ச்சி பணிகளை செய்ய முடியாமல், நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு வந்துள்ளோம்' என, உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களே கூறுகின்றனர்.
(இந்த கட்டத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது)
முதல்வர் சித்தராமையா: நாங்கள் ஆண்டு தோறும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 39,372 கோடி ரூபாய் ஒதுக்குகிறோம். இந்த திட்டம் கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிராவில் மட்டுமே உள்ளது. பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களில் திட்டங்களை செயல்படுத்துங்கள்.
மத்திய அரசு 48 லட்சம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறது. ஆனால் எஸ்.சி., - எஸ்.டி.,யினர் நலனுக்கு, 60,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்குகிறது. இந்த சமுதாயத்தினருக்கான திட்டங்களை, மத்திய அரசே செயல்படுத்தும்படி பிரதமருக்கு நெருக்கடி தாருங்கள். வெறும் அரசியலுக்காக பேசுவது சரியல்ல.
சுரங்க நில உரிமையாளர்களிடம், வரி விதிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் நம் மாநிலத்துக்கு 4,700 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

