ADDED : மார் 08, 2024 01:56 AM

ஷிவமொகா: சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, எஸ்.சி., சமூகத்தை சேர்ந்தவர். சாம்ராஜ் நகரில் நடந்த எஸ்.சி., மாநாட்டில் அவர் பேசுகையில், 'தலித் சமூகத்தினருக்கு, முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைப்பது இல்லை' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா அளித்த பேட்டி:
தேர்தல் நேரத்தில் மட்டும் தான், காங்கிரசுக்கு தலித் மக்கள் ஞாபகம் வருகிறது. அந்த சமூக ஓட்டுகளை கவர, 'தலித் முதல்வர், தலித் பிரதமர்' என்று கோஷம் போடுவர். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர், அப்படியே மறந்து விடுவர்.
துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் பதவிக்கு நைசாக காய் நகர்த்தி வருகிறார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தன் நாற்காலியை காப்பாற்றும் முயற்சியில், முதல்வர் சித்தராமையா ஈடுபட்டு உள்ளார்.
ஆதரவு அமைச்சரான மஹாதேவப்பாவிடம், தலித் சமூகத்திற்கு முதல்வர் பதவி கேட்கும்படி கூறி, துாண்டி விடுகிறார். காங்கிரஸ் அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

