வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!
வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!
ADDED : டிச 06, 2025 02:07 PM

கரூர்: வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கரூர் மாவட்டம் மகாதானபுரம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பிரபு கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்,36. இவர் கட்டுமான வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் வீரம்மாள் இறந்துவிட்டார். வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார்.
அப்போது மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு,46, என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் நோட்டுக்களை சதீஷிடம் கொடுத்தனர்.
அந்த பணத்தை, அலுவலகத்தில் இருந்த, விஏஓ பிரபு வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

