அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த தேர்தல் கமிஷன்: முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம்
அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த தேர்தல் கமிஷன்: முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம்
ADDED : ஆக 08, 2025 12:49 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், நான்கு அரசு ஊழியர்களை தேர்தல் கமிஷன் தற்காலிக பணி நீக்கம் செய்ததற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி வேகம் எடுத்துள்ளது. இந்தச் சூழலில் இரு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் சுணக்கம் காட்டியதாகவும், கடமை தவறியதாகவும் கூறி நான்கு அரசு அதிகாரிகளை தேர்தல் கமிஷன் அதிரடியாக தற்காலிக பணி நீக்கம் செய்தது.
கணினி பணியாளர் மீதும் நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யவும் தேர்தல் கமிஷன் பரிந்துரைத்தது. மேற்குவங்க அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மாநில முதல்வர் மம்தா, கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தான் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க முடியும். இதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தேர்தலுக்கு நிறைய கால அவகாசம் இருக்கிறது. இந்தச் சூழலில் அரசு ஊழியர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்திருப்பது சரியல்ல.
தேசிய குடியுரிமை பதிவேட்டின் கீழ் யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம் என தேர்தல் கமிஷன் நினைக்கிறதா? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி என்ற பெயரில் பின் கதவு வழியாக தேசிய குடியுரிமை பதிவேட்டை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது.
என்னை போல வயதானவர்களிடம் பிறப்பு சான்றிதழ் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் அந்த காலத்தில் பலர் வீட்டிலேயே பிறந்தனர். தவிர இயற்கை பேரிடர்களின் போது, ஒரு சிலர் அதை தவறவிட்டிருக்கலாம். நான் ஒன்று கேட்கிறேன், முதலில் இந்த சட்டத்தை கொண்டு வந்தவர்களிடம் இந்த ஆவணங்கள் இருக்குமா?
பா.ஜ., ஆளும் ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கே திரும்பி விட்டனர்.
இது இரட்டை இன்ஜின் அரசுகளின் மிகப் பெரிய சதி. மத்திய அரசு ஒன்றை மறந்துவிடக்கூடாது, நாட்டின் தேசிய கீதம் வங்க மொழியில் தான் எழுதப்பட்டது. ஆனால், வங்கமொழி பேசுவோர் வங்கதேசத்தவர்களாக முத்திரை குத்தப்படுகின்றனர் அல்லது மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்கியா அகதிகளாக பார்க்கப்படுகின்றனர்.
சொந்த தாய்மொழியில் பேசுவது என்பது அத்தனை பெரிய குற்றமா? உண்மையிலேயே சட்டவிரோதமாக ஒருவர் இந்தியாவுக்குள் ஊடுருவியிருந்தால், அவரை திருப்பி அனுப்புங்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்.
ஆனால், சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என்ற பெயரில் உண்மையான குடிமக்களை துன்புறுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
கடந்த, 1912ல் வெளியிடப்பட்ட 10 ரூபாய் தாளில் வங்கமொழி இருக்கிறது. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களோ வங்கமொழியே இல்லை என்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

