தகுதியற்ற கார்டுகள் மட்டுமே ரத்து முதல்வர் சித்தராமையா விளக்கம்
தகுதியற்ற கார்டுகள் மட்டுமே ரத்து முதல்வர் சித்தராமையா விளக்கம்
ADDED : நவ 19, 2024 06:40 AM

பெங்களூரு: ''தகுதியற்ற ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும். தகுதியான ஏழை மக்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்,'' என, முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று எம்.எல்.ஏ., பவனில் உள்ள கனகதாசர் சிலைக்கு, முதல்வர் சித்தராமையா மாலை அணிவித்தார். பின், அவர் அளித்த பேட்டி:
'அன்ன பாக்யா' திட்டம், எங்களால் செயல்படுத்தப்பட்டது. 2017ல் ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கி வந்தோம். பின், அதை இலவசமாக வழங்கினோம்.
இதை பா.ஜ.,வோ, ம.ஜ.த.,வோ செய்யவில்லை. தகுதியற்ற ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும். தகுதியான ஏழை மக்களுக்கு கார்டு கிடைக்கும்.
பா.ஜ., ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், பீஹார், உத்தர பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளனரா? வரிப்பணம் எங்கு செல்கிறது என்று மத்திய அமைச்சர் குமாரசாமி கேள்வி கேட்கிறார்.
கர்நாடகாவில் இருந்து மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு 4.5 லட்சம் ரூபாய் வரிப்பணம் செல்கிறது. ஆனால், மத்திய அரசோ, மாநிலத்துக்கு 59,000 கோடி ரூபாய் தான் மானியம் தருகிறது.
கடந்தாண்டு நபார்டு வங்கி மூலம், கர்நாடகாவுக்கு 5,600 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. நடப்பாண்டு 2,340 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது. இது அநியாயம் இல்லையா? கடன் தொகை 58 சதவீதம் குறைத்துள்ளது.
இதுதொடர்பாக 'விவசாயிகளுக்கு அநீதி இழைக்க வேண்டாம்' என, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரஹலாத் ஜோஷி, குமாரசாமி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நான் முதல்வரான பின், விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு உள்ளது. 15 லட்சம் ரூபாய் வரை மூன்று சதவீதத்துடன் கடன் வழங்கப்படுகிறது. நபார்டு வங்கி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டுப்பாட்டில் வருகிறது. அவர் என்ன செய்கிறார்?
இவ்வாறு அவர் கூறினார்.

