பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
UPDATED : ஆக 27, 2025 02:00 PM
ADDED : ஆக 27, 2025 09:06 AM

பாட்னா: பீஹாரில் காங்கிரஸ் எம்எல்ஏயும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுலின் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.
பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 'இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு இடத்தில் பெயர் இருந்தவர்கள் என 65 லட்சம் பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்னையாக்கி மக்கள் மத்தியில் கொண்டு சென்றன.
இதன் தொடர்ச்சியாக, 'வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து, பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது' என குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், பீஹாரில் கடந்த 17ம் தேதி முதல் பிரசார நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இதில் பங்கேற்கும்படி, 'இண்டி' கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், இண்டி கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில், பாட்னா புறப்பட்டு சென்றார்.
பீஹாரில் ராகுல் மேற்கொள்ளும் இன்றைய நடைபயணத்தில் பங்கேறார். நடைபயணத்தில் பங்கேற்ற பின், மாலை சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார். கடந்த, 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, கன்னியாகுமரியில் ராகுல் துவங்கிய, 'பாரத் ஜோடோ' யாத்திரையை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.