'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்கும்: மும்பையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்கும்: மும்பையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : மார் 18, 2024 12:29 AM

மும்பை: ''தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஆளும் பா.ஜ., அரசின், 'ஒயிட் காலர்' ஊழல் அம்பலமாகி உள்ளது,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் நடத்திய பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை, மஹாராஷ்டிராவின் மும்பையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதையொட்டி, மும்பையின் சிவாஜி பார்க்கில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வெளிநாட்டு பயணம்
இதில், ராகுல் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், மும்பை சென்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மற்றும் போலி பிரசாரங்கள் ஆகிய இரண்டை மட்டும் தான் பிரதமர் செய்து வந்துள்ளார். இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இண்டியா கூட்டணி என நாம் பெயர் வைத்த பின், இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்துவதையே பா.ஜ., நிறுத்திவிட்டது; இது, அவர்களின் பயத்தைக் காட்டுகிறது.
நம்மை ஊழல்வாதிகள் என பிரதமர் மோடி விமர்சிக்கிறார். ஆனால், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, பா.ஜ., அரசின் 'ஒயிட் காலர்' ஊழல் அம்பலமாகி உள்ளது.
அமலாக்கத் துறை
எனவே, பா.ஜ., அரசை நாம் வீழ்த்த வேண்டும். மத்தியில் மதச்சார்பற்ற, கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசை, இண்டியா கூட்டணி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''இண்டியா கூட்டணி கட்சியினருக்கு எதிராக அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும் செயல்படுகின்றன,'' என்றார்.
காங்., - எம்.பி., ராகுல் பேசியதாவது:
பிரதமர் மோடி, அதிகாரம் படைத்தவர்களுக்காக உழைக்கும் முகமூடி. சிவசேனா மற்றும் தேசியவாத காங்., பிளவுபட்டு, அதில் இருந்து பிரிந்து சென்ற வர்கள் பா.ஜ.,வுடன் இணைந்தது தற்செயல் என நினைக்கிறீர்களா?
மஹாராஷ்டிராவை சேர்ந்த தலைவர் ஒருவர், என் தாய் சோனியா முன் கண்ணீர் விட்டு கதறியதை கண்டேன். இந்த அதிகாரம் படைத்தவர்களை எதிர்த்து, அவரால் சண்டை போட முடியாததை நினைத்து, அவர் வெட்கப்படுவதாக கூறினார். சிறையில் அடைத்துவிடுவர் என கதறினார்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை இல்லாமல் மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
எனவே தான், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டு சீட்டுக்களையும் எண்ண வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

