1,000 பேருக்கு மூன்று படுக்கைகள் சுகாதாரத்துறையை மேம்படுத்த முதல்வர் உறுதி
1,000 பேருக்கு மூன்று படுக்கைகள் சுகாதாரத்துறையை மேம்படுத்த முதல்வர் உறுதி
ADDED : மே 29, 2025 08:16 PM
டில்லிகேட்:“வரும் ஆண்டுகளில் 1,000 குடிமக்களுக்கு குறைந்தபட்சம் மூன்று படுக்கைகள் கிடைப்பதை மாநில பா.ஜ., அரசு உறுதி செய்யும்,” என, முதல்வர் ரேகா குப்தா உறுதி அளித்தார்.
லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் மருத்துவ மரபியல் வார்டு, பாலுாட்டுதல் மேலாண்மை அலகுகள், நியூக்ளிக் அமில பெருக்க சோதனை ஆய்வகம் ஆகிய மூன்று முக்கியமான சுகாதார வசதிகளை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
இது வெறும் திறப்பு விழா மட்டுமல்ல, சுகாதார சீர்திருத்தத்திற்கான ஒரு புதிய பயணத்தின் துவக்கமாகும்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மரபியல் ஆய்வகம், நாட்டின் நான்காவது மற்றும் டில்லியின் முதல் பிரிவாகும். மரபணு கோளாறுகளால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதைப் பார்க்க வேண்டிய பல பெற்றோர் உள்ளனர்.
இந்த மருத்துவ மரபியல் மையம் நிறுவப்பட்டதன் மூலம், பிறவி நோய்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்.
முதிர்ச்சியடையாத பல குழந்தைகளின் தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். பாலுாட்டும் தாய்மார்கள், இந்த அலகுக்கு தங்கள் பாலை தானம் செய்யலாம்.
இப்போது முதிர்ச்சியடையாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பது சாத்தியமாகும். ஒரு குழந்தைக்கு தாயின் பால் மிகவும் முக்கியமானது.
ஆயிரம் பேருக்கு மருத்துவமனையில் குறைந்தபட்சம் இரண்டு படுக்கைகள் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது. ஆனால் டில்லி அரசு மருத்துவமனைகளில், 1000 பேருக்கு 0.42 படுக்கைகளே உள்ளன.
தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்தால், 1000 பேருக்கு 1.5 படுக்கைகள் மட்டுமே உள்ளன. தேசிய தலைநகரில் இதுதான் நிலைமை.
வரும் ஆண்டுகளில் 1,000 குடிமக்களுக்கு குறைந்தபட்சம் மூன்று படுக்கைகள் கிடைப்பதை மாநில பா.ஜ., அரசு உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் பங்கஜ் குமார் சிங்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.