சிக்கபல்லாபூர் காங்., வேட்பாளரை ஆதரித்து பா.ஜ., - எம்.பி., பிரசாரம்?
சிக்கபல்லாபூர் காங்., வேட்பாளரை ஆதரித்து பா.ஜ., - எம்.பி., பிரசாரம்?
ADDED : மார் 16, 2024 10:49 PM

க்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., பச்சேகவுடா மாற்றுக்கட்சிக்கு பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
காங்கிரஸ் - ம.ஜ.த., கட்சிகளின் கோட்டையாக இருந்த, சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில் 2019 தேர்தலில், முதன்முறையாக பா.ஜ., வென்றது.
பச்சேகவுடா, 81, எம்.பி., ஆனார். மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என, ஆவலாக இருந்தார். கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்தார்.
தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
லோக்சபா தேர்தலில் அவருக்கு மீண்டும் 'சீட்' கிடைக்காது என்று கூறப்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட அவர், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார்.
பா.ஜ.,வில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்தும், லோக்சபாவில் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்பது சபாநாயகர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்தது. லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதிக்கு, புதிய வேட்பாளரை பா.ஜ., தேடுகிறது.
பச்சேகவுடாவின் மகன் சரத் பச்சேகவுடா, ஹொஸ்கோட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். பச்சேகவுடாவின் சம்பந்தி புட்டசாமி கவுடா, கவுரிபிதனுார் சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். அவரும் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கிறார்.
மகனின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சிக்கபல்லாபூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, பச்சேகவுடா பிரசாரம் செய்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

