ADDED : செப் 04, 2025 12:16 AM

இந்துார்: மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தை, எலி கடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள அரசு மருத்துவமனையின் என்.ஐ.சி.யூ., எனப்படும், பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், என்.ஐ.சி.யூ., பகுதியில் சிகிச்சையில் இருந்த இரு பச்சிளங் குழந்தைகளின் கை, கால், கழுத்து, விரல் உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. குழந்தைகள் அழுதபடி இருந்ததை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், குழந்தைகளை எலி கடித்தது தெரியவந்தது. இதையடுத்து, இரு குழந்தைகளுக்கும் அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை நேற்று உயிரிழந்தது. இது தொடர்பாக, விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், சம்பவம் நடந்த போது, தீவிர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த இரு செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மருத்துவ கண்காணிப்பாளர் உள்ளிட்ட நான்கு பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பூச்சிக்கொல்லி மருந்து அளிக்கும் தனியார் நிறுவனத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மருத்துவமனை டீன் அரவிந்த கங்கோரியா கூறியதாவது:
மருத்துவமனையில் எலி தொல்லை இருப்பது குறித்து இரு நாட்களுக்கு முன்னரே ஊழியர்கள் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்கும் சமயத்தில் இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.
எலி கடித்த ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எலி கடித்து இறந்த குழந்தை, சுவாசக் கோளாறு உட்பட பல்வேறு பிரச்னைகளில் அவதிப்பட்டு வந்தது. எலி கடித்ததால் மட்டும் குழந்தை உயிரிழக்கவில்லை. சம்பவம் குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.