போலீசார் அடாவடியால் குழந்தை பலி; கர்நாடகாவில் 3 அதிகாரி 'சஸ்பெண்ட்'
போலீசார் அடாவடியால் குழந்தை பலி; கர்நாடகாவில் 3 அதிகாரி 'சஸ்பெண்ட்'
ADDED : மே 28, 2025 04:06 AM

மாண்டியா: கர்நாடகாவில் வாகன சோதனையின்போது, போலீசாரின் அடாவடியால், 3 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து மூன்று போலீஸ் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், கோரவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அசோக் - வாணிஸ்ரீ தம்பதியின் மகள் ஹிரிதிக் ஷா, 3. நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பு விளையாடினார்.
அப்போது தெருநாய் ஒன்று, ஹிரிதிக் ஷாவை கடித்தது. இவருக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல்சிகிச்சைக்காக மாண்டியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி டாக்டர் கூறினார். இதனால், தன் சகோதரருடன் வாணிஸ்ரீ, மகளை மடியில் வைத்தபடி பைக்கில் சென்றார்.
மாண்டியா டவுன் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் திடீரென சாலையின் குறுக்கே வந்து பைக்கை மறித்தனர். இதனால், பைக் நிலைதடுமாறியது.
இதில், தாயின் மடியில் இருந்த ஹிரிதிக் ஷா, தவறி விழுந்து பின்னால் வந்த வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தார்.
இது, மாநிலம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாகன சோதனையில் ஈடுபட்ட ஏ.எஸ்.ஐ.,க்கள் ஜெயராம், நாகராஜ், குருதேவ் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி உத்தரவிட்டார். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மாண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சர் செலுவராயசாமி, நேற்று ஹிரிதிக் ஷா வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் நிவாரணத் தொகை பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.