ADDED : ஜூலை 08, 2025 12:28 AM
நாளந்தா: பீஹாரில், குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட சிறிய தகராறு வன்முறையாக மாறியதில், ஒரு இளம்பெண்ணும், இளைஞரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பீஹாரின் நாளந்தா மாவட்டம், தீப்நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட தும்ராவன் கிராமத்தில் அருகருகே வசிப்பவர்கள் ஓம் பிரகாஷ் பஸ்வான் மற்றும் சந்தோஷ் பஸ்வான்.
நேற்று முன்தினம் இரவு இருவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் இடையே விளையாட்டு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது வன்முறையாக மாறி இரண்டு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதையடுத்து துப்பாக்கியாலும் மாறி, மாறி சுட்டதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி, ஓம் பிரகாஷ் பஸ்வானின் மகள் அன்னு குமாரி, 22, மற்றும் சந்தோஷ் பஸ்வானின் மகன் ஹிமான்ஷு குமார், 24, ஆகியோர் உயிரிழந்தனர்.
இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

