குழந்தை திருமணம்: அதிரடி வேட்டையில் அசாமில் 431 பேர் கைது
குழந்தை திருமணம்: அதிரடி வேட்டையில் அசாமில் 431 பேர் கைது
ADDED : டிச 23, 2024 04:20 AM

குவஹாத்தி : அசாமில் குழந்தை திருமணம் தொடர்பான நடவடிக்கையில், மூன்றாம் கட்டமாக நடந்த அதிரடி வேட்டையில், 431 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வயது வரம்பு பற்றி கவலைப்படாமல், சட்டவிரோதமாக குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, குழந்தை திருமணங்களுக்கு எதிரான இயக்கத்தை மாநில அரசு கடந்தாண்டு துவங்கியது.
முதல்முறையாக 2023 பிப்ரவரியில் நடந்த அதிரடி வேட்டையில், குழந்தை திருமணம் செய்து வைத்த புரோகிதர்கள், பெற்றோர், உறவினர்களை அரசு கைது செய்தது. அப்போது 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,483 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபரில் 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 915 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கை டிச., 21 மற்றும் 22ல் நடந்தது.
இது குறித்து முதல்வர் சர்மா நேற்று கூறுகையில், ''சட்டவிரோத குழந்தைதிருமண நடவடிக்கையில் ஈடுபட்டதாக 345 வழக்குகளை பதிவு செய்த போலீசார், 431 பேரை கைது செய்துள்ளனர். கைதான நபர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து இது போன்று அதிரடி வேட்டை நடத்தி, குழந்தை திருமணம் என்னும் சமூக குற்றத்தை ஒழிப்போம்,'' என்றார்.