குழந்தைகளுக்கான 'அல்மான்ட்- கிட்' சளி, காய்ச்சல் மருந்தில் நச்சுப்பொருள்; தெலுங்கானாவில் தடை விதிப்பு
குழந்தைகளுக்கான 'அல்மான்ட்- கிட்' சளி, காய்ச்சல் மருந்தில் நச்சுப்பொருள்; தெலுங்கானாவில் தடை விதிப்பு
ADDED : ஜன 10, 2026 07:38 PM

ஹைதராபாத்: குழந்தைகளுக்கு சாதாரண சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்றவற்றுக்கு டாக்டர்கள் பரவலாக பரிந்துரைக்கும், 'அல்மான்ட்- கிட்' சிரப்பில், 'எத்திலீன் கிளைக் கால்' என்ற நச்சுப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறி, அதை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என, தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கொல்கட்டா கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பி டம் இருந்து ஆய்வக அறிக்கை ஒன்றை பெற்றுள்ளோம். அதில், 'லிவோசிட்ரசின்' மற்றும் 'மான்டிலுாகாஸ்ட்' ஆகிய மருந்து கலவைகளை உடைய, 'அல்மான்ட்- கிட்' சிரப்பில் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சிரப்பை பீஹாரில் உள்ள 'டிரைடஸ் ரெமடீஸ்' என்ற மருந்து நிறுவனம் தயாரிக்கிறது. இதன் குறிப்பிட்ட தயாரிப்பு தொகுதிகளில், 'எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த சிரப் வீட்டில் இருந்தால் உடனே பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
தெலுங்கானா முழுதும் உள்ள அனைத்து மருந்து ஆய்வாளர்களும், விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள், மருத்துவமனைகள் ஆகிய அனைவருக்கும் இது தொடர்பாக உடனடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அண்மையில் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து உட்கொண்டு, மத்திய பிரதேசத்தில், 14 குழந்தைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

