ADDED : ஜன 06, 2026 03:48 AM

புதுடில்லி: லடாக் எல்லையில், சீன ராணுவம் தன் படைகளின் எண்ணிக்கையை கடந்த ஓராண்டில் பாதியாக குறைத்தாலும், எல்லையோரங்களில் நம் நாட்டைவிட, நான்கு மடங்கு வேகத்தில் உட்கட்டமைப்புகளை உருவாக்கி வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய -- சீன ராணுவத்துக்கு இடையே கடந்த 2020 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. இதில், நம் ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இருநாட்டு உறவில் விரிசல் விழுந்தது.
நம்பிக்கை
இந்நிலையில், ரஷ்யாவின் காசனில் கடந்த ஆண்டு நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில், எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த படைகள் பரஸ்பரம் விலக்கிக் கொள்ளப்பட்டன.
இதன்படி, எல்லைப் பகுதியில் படைகளின் எண்ணிக்கையை சீன அரசு கடந்த ஓராண்டில் பாதியாக குறைத்துள்ளதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் 'தி எகானமிஸ்ட்' இதழ் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2024க்கு பின் இந்தியா - சீனா இடையே பதற்றம் தணிந்துள்ளது. எனினும், தற்போது குளிர்காலம் துவங்கியுள்ளதால் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே திரும்பப் பெறப்பட்ட படைகளைத் தவிர, மற்ற படைகள் ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றன.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது எல்லையில் இருந்த இரண்டு படைப்பிரிவுகளை பாகிஸ்தான் எல்லைக்கு திசைதிருப்பும் அளவுக்கு, சீனா மீது இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது.
கட்டுமானம்
இதேபோல், எல்லையில் பதற்றத்தை சீன அரசு தணித்திருந்தாலும், அப்பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஒரே நேரத்தில் சாலைகள், பாலங்கள், கிராமங்கள் மற்றும் ராணுவ உதவியுடன் கட்டுமானத்தை விரைவுபடுத்தியுள்ளது. இந்தியாவை விட நான்கு மடங்கு வேகத்தில் தன் உட்கட்டமைப்பை சீனா கட்டி வருகிறது.
பாங்காங் ஏரியின் குறுக்கே, 2024ம் ஆண்டின் மத்தியில் கட்டப்பட்ட பாலம், எல்லையில் படைகளை விரைவாக மறுசீரமைக்க சீன அரசுக்கு உதவுகிறது. அவர்களின் சாலைகள், எல்லையை ஒட்டி அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை ஆக்கிரமிப்பதாக உள்ளன. இது தவிர, பொதுமக்களை எல்லைக்கு அருகில் இடமாற்றம் செய்து, வீடுகள், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளுடன் கூடிய கிராமங்களை சீன அதிகாரிகள் நிறுவியுள்ளனர்.
இதன் மூலம் சீன அரசு, எல்லையில் தன் படை பலத்தை முழுதும் பயன் படுத்த தேவையில்லை. தகவல் தொடர்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதால், முழு படையையும் இரண்டு நாட்களுக்குள் எல்லையில் திரட்ட வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரான உறவு
இதுகுறித்து நம் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடையேயான 'ஹாட்லைன்' அழைப்புகளுக்கு உடனே பதிலளிக்கப்படுகிறது. இருதரப்புக்கு இடையே பேச்சுகளும், இப்போது, நிமிடங்களுக்கு பதிலாக பல மணி நேரங்கள் நீடிக்கின்றன. ஆனால், எல்லையில் சீன அரசு தன் படைகளை குறைக்கவில்லை.
இதற்கு இணையாக, நம் படைகளையும் நிறுத்தியுள்ளோம். இது, தளவாட ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் பார்க்கப்பட வேண்டும். எனினும், முன்பைவிட இருநாடு களுக்கும் இடையே உறவு சீராக உள்ளது.
செயற்கைக்கோள் படங்கள் மூலம் சீன எல்லையை நம் படையினர் ஆய்வு செய்ததில், நிரந்தர கட்டமைப்புகளின் வளர்ச்சி, 2020 முதல் 10 மடங்கு அதிகரித்துள்ளதை கண்டறிந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டே, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள நியோமாவில், புதிய விமானப்படை தளத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறுவி உள்ளது.
சீன நிலப்பரப்பு, எல்லைக்கோடு அருகே படைகளை விரைவாக நகர்த்த உதவும்; ஆனால், நம் நாட்டின் எல்லைப்பகுதி மலைப் பாங்கான, தாழ்வான இடத்தில் இருந்து மேல்நோக்கி நகர்த்த வேண்டிய சூழல் உள்ளதை கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

