
நிஜ ஹீரோ
இயல்பான நடிப்பின் மூலம், ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் யஷ் ஷெட்டி. தற்போது இவர் நாயகனாக நடிக்கும், ஜங்கல் மங்கள் திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. இதில் ஹர்ஷிதா ராமசந்திரா நாயகியாக நடிக்கிறார்.
படம் குறித்து யஷ் ஷெட்டி கூறுகையில், ''இது மலைப்பகுதியில் நடக்கும் காதல் கதை, படத்தில் நான் ஹீரோ அல்ல. கதைதான் உண்மையான ஹீரோ. இயக்குனர் அற்புதமான கதையை தேர்வு செய்துள்ளார். மாறுபட்ட கதையாகும். என் கதாபாத்திரம் மற்றும் கதை மிகவும் நன்றாக உள்ளது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, சுப்ரமண்யா அருகில் உள்ள காட்டில் நடந்தது. இன்னும் ஒரு மாதத்தில் படம் திரைக்கு வரும்,'' என்றார்.
மாரம்மா தேவி
கன்னடத்தில் எப்போதாவது, பக்தி படங்கள் திரைக்கு வருகின்றன. தற்போது சிம்ஹ ரூபிணி திரைப்படம், திரைக்கு வர தயாராகிறது. கதை குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'இது, மாரம்மா தேவியை பற்றிய படமாகும். இம்மாதம் 17ம் தேதி திரைக்கு வருகிறது. மாரம்மா தேவியின் சக்தியை மையமாக கொண்டது. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கும்.
'அதே போன்று அம்பாள், மஹாலட்சுமி ரூபத்தில், பூமிக்கு வருகிறார். பின் அவர் எப்படி மாரம்மா தேவி ஆகிறார் என்பதற்கு, படத்தில் பதில் உள்ளது. யஸஷ்வினி, அங்கிதா கவுடா, திவ்யா உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது' என்றனர்.
நவராத்திரி விரதம்
சின்னத்திரை தொடரில் வில்லியாக நடித்து, அடையாளம் காணப்பட்ட நடிகை ஷரண்யா ஷெட்டி. அதன்பின் வெள்ளித்திரையில் நுழைந்து நாயகியானார். கை நிறைய பட வாய்ப்புகளை வைத்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த, கிருஷ்ணம் பிரணயம் சகி 50 நாட்களை தாண்டி ஓடுவதால், படக்குழுவினர் குஷி அடைந்துள்ளனர். தற்போது ஷரண்யா, தசரா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, அவரிடம் கேட்ட போது, ''இதற்கு முன், என் தாயார், நவராத்திரியில் பூஜை செய்வார். மூன்று ஆண்டாக, நானே பூஜை செய்கிறேன். நவராத்தியின் ஒன்பது நாட்களும் அசைவம் சாப்பிட மாட்டோம். பட பிரசாரத்துக்காக மாநிலம் முழுதும் சுற்றுவதால், இம்முறை என்னால் விரதம் அனுஷ்டிக்க முடியவில்லை,'' என்றார்.
புத்துணர்ச்சி
நடிகர் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக, அபூர்வா படத்தில் அறிமுகமானவர் அபூர்வா. அதன்பின் திரும்பி பார்க்கவே நேரம் இல்லாமல், அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இப்போதும் நான்கு படங்களை கையில் வைத்துள்ளார். பிசியான படப்பிடிப்புக்கு இடையிலும், நவராத்திரி விரதம் கடை பிடிக்கிறார்.
இது குறித்து அபூர்வா கூறுகையில், ''வழக்கம் போன்று இம்முறையும் கடினமான விரதம் மேற்கொண்டுள்ளேன். தினமும் காலை விளக்கேற்றுகிறோம். இதை மாலை வரை அணையாமல் பார்த்து கொள்கிறோம். காலை முதல் விரதம் இருக்கிறேன். தண்ணீரை தவிர வேறு எதையும் சாப்பிடுவில்லை. விரதம் இருப்பதுடன் படப்பிடிப்பிலும் பங்கேற்கிறேன், இது எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது,'' என்றார்.
தைரியசாலி
'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்த நடிகர் கார்த்திக் மகேஷ், தற்போது 'ராமரசா' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவரது கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டது. இது தொடர்பாக, படக்குழுவினர் கூறுகையில், 'ஜி அகாடமியில் நடிப்பு பயிற்சி பெற்ற 15 பேர், இந்த படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் மகேஷை சந்தித்து கதையை கூறினோம். அவரும் சம்மதித்தார். முதலில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டோம். இப்போது பட்ஜெட் அதிகரிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் படம் தயாரிக்க தைரியம் வேண்டும். அது, தயாரிப்பாளர் குரு தேஷ்பாண்டேவிடம் உள்ளது' என்றனர்.
கிராம கலாசாரம்
தனஞ்செயா நாயகனாக நடிக்கும், அண்ணா பிரம் மெக்சிகோ என்ற படத்தில், நடிகை ரீஷ்மா நாணய்யா நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். படம் பற்றி இயக்குனர் சங்கர் குருவிடம் கேட்ட போது, 'இந்த படத்தில் நாகபூஷண், பூர்ணசந்திரா, ரங்காயணா, உமாஸ்ரீ முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ரீஷ்மா நாணய்யா நடிக்கிறார். ஏற்கனவே சில காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு உள்ளோம். இது ஆக்ஷன், குடும்ப பின்னணி கொண்ட கதையாகும். கிராமத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்' என்றனர்.