
முதியவருக்கு இளம் தாய்
ஜக்கேஷ் நடிப்பில், குருபிரசாத் இயக்கத்தில் உருவான ரங்கநாயகா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல் காட்சி ஒன்றை, படக்குழுவினர் வெளியிட்டனர். பாடலில் ஜக்கேஷ், ரசிதா மஹாலட்சுமி ஆட்டம் போடுகின்றனர். இந்த பாடலை நாகராஜ் எழுதி உள்ளார்.
படத்தில் சைத்ரா கொட்டூர், ஜக்கேஷுக்கு தாயாக நடித்துள்ளார். கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் மாறுபட்ட இந்த கதாபாத்திரத்தில், வயதான நடிகையை தேடினர். காமெடி கதைக்கு பொருந்துவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவே சைத்ரா கொட்டூரை தேர்ந்தெடுத்தனர். தன்னை விட பெரியவரான ஜக்கேஷுக்கு தாயாக, நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
மாறுபட்ட கதாபாத்திரம்
நடிகர் ராகவேந்திர ராஜ்குமார், சமீப ஆண்டுகளாக மாறுபட்ட கதை, கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களை மகிழ்விக்கிறார். தற்போது கண்ணாமூச்சு காடெகொடே என்ற படத்தில் நடிக்கிறார். மர்ம முடிச்சுகள் கொண்ட இந்த படத்தில், அவர் ஓய்வு பெற்ற டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கதையில் இவரது கதாபாத்திரமே, திருப்புமுனையை ஏற்படுத்துமாம். படத்தை அனிதா வீரேஷ் மற்றும் மீனாட்சி ராஜசேகர் இணைந்து தயாரித்துள்ளனர். பெங்களூரு, மங்களூரில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படத்துக்கு, சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் போஸ்டரை சமீபத்தில், ஆதரவற்றோர் இல்லத்தில் வெளியிட்டனர்.
அழ வைக்கும் கதை
பிரீத்திய ஹுச்சா என்ற பெயரில் திரைப்படம் ஒன்று, கன்னடம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகிறது. 'மியூசிகல் டிராஜடி லவ்' ஸ்டோரியாகும். தமிழில் காதல் பைத்தியம் என்ற பெயரில் திரைக்கு வருகிறது. 1998ல் ஹாசனில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, இந்த படத்தை கவுரிகுமார் தயாரித்துள்ளார். விஜய் நாயகனாக, மும்பையை சேர்ந்த குங்கும் நாயகியாக அறிமுகமாகிறார். ரசிகர்களை அழ வைக்கும் கதை கொண்டது.
ஒரு டஜன் பேய்கள்
நடிகர் கோமல் பேக் டு பேக் படங்களில் நடிக்கிறார். இவற்றில் குடேரா படமும் ஒன்றாகும். இவருக்கு ஜோடியாக பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார். அனுப் அந்தோணி கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். காமெடி கலந்த ஹாரர் கதையாகும். ஒரு பாழடைந்த வீட்டில், பேய்கள் செய்யும் அட்டகாசத்தை காமெடியாக கூறியுள்ளனர்.
பொதுவாக ஒரு பேய் இருந்தாலே, மிரட்டலாக இருக்கும். ரசிகர்கள் இருக்கைக்கு நுனிக்கு வருவர். இந்த படத்தில் ஒரு டஜன் பேய்கள் உள்ளன. கோமல் இதற்கு முன்பும், ஹாரர், காமெடி படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களுக்கு பிடிக்கும் என, படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ராதிகா சொத்து ரூ.120 கோடி
நடிகை ராதிகா குமாரசாமி, தன் 14வது வயதில் திரையுலகில் நுழைந்தவர். அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தவர். அப்போதே அரசியலில் தீவிரமான, தயாரிப்பாளருமான குமாரசாமியை திருமணம் செய்து, சர்ச்சைக்கு ஆளானார். இவர்களுக்கு ஷமிகா என்ற பெண் குழந்தை உள்ளது. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பதுடன் பட தயாரிப்பிலும் இறங்கினார். இவர் தயாரித்த முதல் படம் லக்கி, 2012ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. தன் மகளுடன் மங்களுரில் வசிக்கும் ராதிகா குமாரசாமியின் சொத்து மதிப்பு 120 கோடி ரூபாய். இவரது நடிப்பில் படங்கள் திரைக்கு வர தயாராகின்றன.