ADDED : ஜூலை 13, 2025 03:49 AM
மும்பை:குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள மூன்று துறைமுகங்களில் இருந்து, 35 கோடி ரூபாய் மதிப்பிலான சீன பட்டாசுகளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது. மேலும் இந்த கடத்தல் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளது.
சிறிய அலங்கார செடிகள் என்ற போர்வையில், 100 டன் எடை கொண்ட சீன பட்டாசுகள் இந்தியாவுக்கு கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளன.
குஜராத்தின் முந்த்ரா, கண்ட்லா மற்றும் நவி மும்பையில் உள்ள நவ ஷேவா துறைமுகங்கள் வழியாக இவை கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளன.
'ஆப்பரேஷன் பையர் டிரையல்' என்ற பெயரிலான சோதனை நடவடிக்கையின் வாயிலாக, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் இந்த மூன்று துறைமுகங்களில் ஏழு கன்டெய்னர்களை இடைமறித்து சோதனை நடத்தியுள்ளது.
அப்போது, சிறிய அலங்கார செடிகள், செயற்கை பூக்கள் மற்றும் பிளாஸ்டிக் பாய்கள் என்ற பெயரில் சட்ட விரோதமாக சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 35 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடத்தி கொண்டு வரப்பட்ட பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பதாகவும், இவை உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.