ADDED : ஜன 10, 2025 02:15 AM
போபால், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள மத்திய சிறை, 151 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. இதில், 3,600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமியைச் சேர்ந்த 32 பேர் உள்ளிட்டோர், சிறை உயர் பாதுகாப்பு மண்டல பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இங்குள்ள 'பி - பிளாக்' வளாகத்தின் உள்ளே, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது, நேற்று முன்தினம் மாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து சிறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் பங்கரே கூறுகையில், “சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது, சீன தயாரிப்பு ட்ரோன். இதை போலீசில் ஒப்படைத்துள்ளோம். குடியரசு தினம் நெருங்கும் நிலையில் உயர் பாதுகாப்புள்ள இந்த சிறைக்குள் ட்ரோன் வந்தது எப்படி என்பது குறித்தும், சதி திட்டத்தை அரங்கேற்றுவதற்காக ட்ரோன் பயன்படுத்தப்பட இருந்ததா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்,” என்றார்.
முன்னதாக, 2016ல் சிமி அமைப்பைச் சேர்ந்த எட்டு பேர், சிறைக்காவலரை கொலை செய்து விட்டு சிறையில் இருந்து தப்பினர். அவர்களை போபால் புறநகர் பகுதியில் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

