
சிரித்த முகம்
இளம் நடிகர் குருநந்தன் நாயகனாக நடிக்கும், ராஜு ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம், டிசம்பர் 27ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதுவரை மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த குருநந்தன், இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தென்படுகிறார். படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்காது.
குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் கதை; காமெடிக்கு முக்கியத்துவம் உள்ளது. திரையரங்கை விட்டு வெளியே வரும் போது, சிரித்த முகத்துடன் வர வேண்டும் என்பதே, படக்குழுவினரின் விருப்பம். மிருதுளா நாயகியாக நடித்துள்ளார். ரவிசங்கர், சிக்கண்ணா, ஜெய் ஜெகதீஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்களை லண்டனில் படமாக்கி உள்ளனர்.
மடாதிபதிகள் வாழ்த்து
பிரபல பாடகர் ஸ்ரீவித்யா பூஷண், ஹரிதாசர தினசரி என்ற படத்தில் புரந்தரதாசர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்புடன், படத்தின் பாடல்களுக்கும் இவரே இசை அமைத்துள்ளார். புரந்தரதாசரின் வாழ்க்கை வரலாறு, அவரது படைப்புகள், அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் படத்தில் விவரித்துள்ளனர். புரந்தரதாசர் கதாபாத்திரத்துக்கு ஸ்ரீவித்யா பூஷண் உயிரூட்டியுள்ளார். படத்தின் டிரெய்லரை, உடுப்பி பெஜாவர் ஸ்ரீ கிருஷ்ண மடத்தில், மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.
மிடுக்கான அதிகாரி
இன்று டிஜிட்டல் யுகமாக மாறியுள்ளது. குற்றவாளிகளும் ஹைடெக் தொழில்நுட்பத்தில், மக்களை மோசடி செய்கின்றனர். எங்கோ அமர்ந்து கொண்டு, ஆன்லைன் வழியாக கண்ணிமைக்கும் நேரத்தில், லட்சக்கணக்கான ரூபாயை, தங்கள் கணக்குக்கு பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். படித்தவர்களே இவர்களிடம் பணத்தை பறிகொடுத்துவிட்டு விழி பிதுங்கி நிற்பதை பார்க்கிறோம்.
'ஆன்லைன்' மோசடி குறித்து, பல்வேறு மொழிகளில் படங்கள் வந்துள்ளன. கன்னடத்தில் திரைக்கு வரவுள்ள கஸ்டடி படமும் கூட, இதே கதை கொண்டது. இதில் பிரியா ஷடவர்தன் மிடுக்கான அதிகாரியாக நடித்துள்ளார். இதற்கு முன் பீமா படத்திலும், இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து, ரசிகர்களிடம் பாராட்டு பெற்றிருந்தார்.
ரீலீஸ் தேதி மாற்றம்
பொதுவாக உபேந்திரா படங்கள் என்றாலே, ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதே போன்று இவரது நடிப்பில் தயாரான, யுஐ படமும் எப்போது வரும் என, ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் போஸ்டர், இவர்களுக்கு ஆர்வத்தை துாண்டியுள்ளது. நவம்பரிலேயே திரைக்கு வரும் என, படக்குழுவினர் கூறினர்.
ஆனால் படப்பிடிப்பு தாமதமானதால், ரிலீஸ் தேதி மாறியது. டிசம்பர் 20ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதை உபேந்திரா இயக்கி, நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரீஷ்மா நானய்யா நடித்துள்ளார். இந்த படம் கன்னடத்துடன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகளில் திரைக்கு வருகிறது.
பாசப்பிணைப்பு
மாறுபட்ட கதை கொண்ட, சன் ஆப் முத்தண்ணா திரைப்படத்தின் டிரெய்லர், டீசர் சமீபத்தில் வெளியானது. நடிகர் சிவராஜ்குமார், டீசர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். மூத்த நடிகர் தேவராஜின் இளைய மகன் பிரணம், நாயகனாக நடித்துள்ளார். படத்தில் உறவுகளின் முக்கியத்துவம், தந்தை, மகனின் பாசப்பிணைப்பை காண்பித்து உள்ளனர். நடிகர் ரங்காயணா ரகு தந்தையாகவும், பிரணம் மகனாகவும் நடித்துள்ளனர். குஷி ரவி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் யோகராஜ் பட் ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.
மாலில் பேய்
நம்பிக்கை இருக்க வேண்டும்; மூட நம்பிக்கை இருக்க கூடாது. கண்டவர்களின் பேச்சை கேட்டு பிரச்னையில் சிக்க கூடாது என்ற அறிவுரையை கூற வருகிறது, மாந்த்ரிகா திரைப்படம். திகில் கதை கொண்டது. கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள மார்னுடி என்ற இடத்தில் மால் உள்ளது. அந்த மாலுக்கு சென்றவர்கள், பல பாதிப்புக்கு ஆளாகின்றனர். அங்கு பேய் உள்ளது என, அஞ்சுகின்றனர். உண்மையில் அந்த மாலில் பேய் உள்ளதா அல்லது யாராவது சதி செய்கின்றனரா என்ற கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். இப்படத்தை வாணவர்ண ஜம்முலா என்பவர் இயக்குகிறார்.