
வெளிநாட்டில் பயிற்சி
நடிகர் துனியா விஜய், சிறந்த நடிகர் மட்டுமல்ல, திறமையான இயக்குனர் என்பதையும் நிரூபித்துள்ளார். இவர் இயக்கி நடித்த சலகா, பீமா திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடி, வசூலை அள்ளின. தற்போது இவர் இயக்கிய சிட்டி லைட்ஸ் திரைப்படம் தயாராகிறது. இந்த படத்தை, அவர் மிகவும் எதிர்பார்க்கிறார். ஏன் என்றால் இதில் அவரது மூத்த மகள் மோனிஷா விஜய் அறிமுகமாகி உள்ளார்.
தயாரிப்பாளர் மஞ்சு கூறுகையில், ''மோனிஷா தன்னை தயார்படுத்தி கொண்டே, திரையுலகுக்கு வந்துள்ளார். வெளி நாட்டில் நடிப்பு பயிற்சி பெற்றவர். எந்த நடிகைக்கும் குறைவில்லை. இவர், கன்னட திரையுலகில் ஜூனியர் ரம்யாவாக வலம் வருவார். இவர் பார்ப்பதற்கு ரம்யா போன்றே இருக்கிறார்,'' என்றார்.
அன்பும், ஆதரவும்
தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகர் சரண்ராஜ். இவர் தமிழ், கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், ஆக்ஷன், கட் கூற தயாராகிறார். கருநாட கண்மணி என்ற படத்தை இயக்குகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''இந்த படத்தில் என் மகன் தேவ், நாயகனாக அறிமுகமாகிறார். கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எனக்கு சக்தி அளிக்கிறது. இப்போது என் மகன் திரையுலக பயணத்தை துவக்கி உள்ளார். இவருக்கும் அனைவரின் ஆதரவு கிடைக்க வேண்டும் என, நான் விரும்புகிறேன். கல்லுாரி விடுமுறை துவங்கிய பின், படப்பிடிப்பை துவக்க முடிவு செய்து உள்ளோம். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கில் வெளியாகிறது,'' என்றார்.
புதுவித அனுபவம்
ரோஷன் டிசோசா திரைக்கதை எழுதி, இயக்கிய நிமித்த மாத்ரா திரைப்படம், இன்று திரைக்கு வருகிறது. சமீபத்தில் டிரெய்லர் வெளியானது. இதில் சங்கீதா ராஜிவ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை குறித்து, இயக்குனரிடம் கேட்ட போது, ''இது சைக்கலாஜிகல் திரில்லர் கதை கொண்டதாகும்.
''கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், மங்களூரில் நடந்த பயங்கர சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. படத்தை பார்ப்போருக்கு, புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தன் தந்தை பாதியில் நிறுத்திய வழக்கை, பத்திரிகையாளர் ஒருவர் தொடர்கிறார். இதில் அவர் வெற்றி அடைந்தாரா, குற்றவாளியை கண்டுபிடித்தாரா என்பதை, திரையரங்குக்கு வந்து பாருங்கள்,'' என்றார்.
குடும்ப கதை
அஸ்கர் கிருஷ்ணா இயக்கிய, தொட்மனே சொசே படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இயக்குனர் கிரிஷ் காசரவள்ளி கிளாப் அடித்து, படப்பிடிப்பை துவக்கி வைத்தார். கதை குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'படத்தில் ராகஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். தற்போது வன்முறை காட்சிகள் கொண்ட படங்கள் அதிகம் வெளியாகின்றன.
'இதற்கிடையே அழகான குடும்ப கதையை படமாக்கியுள்ளோம். பொதுவாக மறைந்த நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தினரை தொட்மே (பெரிய வீடு) என கூறுவர். ஆனால் அவரது வீட்டுக்கும், படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு ஊரில் நடக்கும் கற்பனை கதையாகும்' என்றனர்.
காதல் கதை
சமீப ஆண்டுகளாக கன்னட திரையுலகில், வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைக்கிறது. தற்போது இதுபோன்ற கதை கொண்ட 1990 என்ற படம் திரைக்கு வர தயாராகிறது.
கதை குறித்து இயக்குனர் நந்தகுமார் கூறுகையில், ''சில நாட்களுக்கு படத்தின் டிரெய்லரை வெளியிட்ட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், படக்குழுவினரை வாழ்த்தினார். இது 1990ல் நடக்கும் காதல் கதை படமாகும். அனைத்து வயதினரும் பார்க்கலாம். அருண் மற்றும் ராணி வாரத் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். பிப்ரவரி 28ல் மாநிலம் முழுதும் திரையிட திட்டமிட்டு உள்ளோம்,'' என்றார்.
தர்ஷன் ரீ ரிலீஸ்
நடிகர் தர்ஷன் நடிப்பில் திரைக்கு வந்து, அமோக வரவேற்பை பெற்ற நம்ம பிரீத்திய ராமு திரைப்படம், இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. படக்குழுவினர் கூறுகையில், 'தர்ஷன் சூப்பர்ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. கரியா, நவகிரஹா, சாஸ்திரி உட்பட, சில படங்கள் ரீ ரிலீஸ்செய்யப்பட்டன.
'இப்போது அவரது வித்தியாசமான நடிப்பில் வெற்றி பெற்ற, நம்ம பிரீத்திய ராமு படம், காதலர் தினத்தன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. பிப்ரவரி 16ம் தேதி தர்ஷனின் பிறந்த நாளாகும். இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்வதன் மூலம், அவருக்கு வாழ்த்து கூறுகிறோம். இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின' என்றனர்.