சித்தூர் இரட்டைக்கொலை வழக்கு; 5 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
சித்தூர் இரட்டைக்கொலை வழக்கு; 5 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
ADDED : அக் 31, 2025 01:14 PM

சித்தூர்: ஆந்திராவில் சித்தூர் மேயர் மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சித்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நவ., 17ம் தேதி ஆந்திராவின் சித்தூர் நகர மேயர் அனுராதா,  தன்னுடைய கணவரும், தெலுங்கு தேசம் கட்சி பிரமுகருமான மோகனுடன் அலுவலகத்தில் இருந்தார். அப்போது, பெண்கள் அணியும், 'பர்தா' உடையணிந்து வந்த, ஐந்து பேர் கும்பல் இருவரையும், அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், கொடூரமாக கொலை செய்தது.
குடும்பத்தில் நிலவி வந்த முன்பகை காரணமாக இந்தக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், மொத்தம் 28 பேரை கைது செய்தனர். 122 பேர் சாட்சியங்களாக விசாரிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் குற்றவாளிகள் என்று கடந்த அக்., 24ம் தேதி சித்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அறிவித்த நிலையில், எஞ்சியவர்களை விடுதலை செய்து  உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று தீர்ப்பு விபரங்களை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. சந்திரசேகர் (மோகனின் உறவினர்), முல்பாகல் வெங்கடேஷ், ஜெயப்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், வெங்கடேஷ் ஆகிய 5 பேருக்கு சித்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சீனிவாசராவ் மரண தண்டனை விதித்து அதிரடியான தீர்ப்பை வழங்கினார்.
தீர்ப்பு வெளியான நிலையில், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சித்தூர் நகரம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

