திருமண விழாவில் சாப்பிட வந்த ஏழை சிறுவன் சுட்டுக்கொலை சி.ஐ.எஸ்.எப்., வீரர் கைது
திருமண விழாவில் சாப்பிட வந்த ஏழை சிறுவன் சுட்டுக்கொலை சி.ஐ.எஸ்.எப்., வீரர் கைது
ADDED : டிச 01, 2025 05:57 AM
புதுடில்லி: சாப்பிடுவதற்காக திருமண மண்டபத்துக்குள் வந்த 17 வயது ஏழை சிறுவனை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர், சுட்டுக் கொன்றார்.
டில்லி ஷாஹ்தாரா மானசரோவர் பூங்கா அருகே, திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் மாலை, திருமண விழா நடந்தது. குடிசையில் வசிக்கும் 17 வயது சிறுவன், விதவிதமான உணவு வகைகளை சாப்பிட ஆசைப்பட்டு, மண்டபத்தின் பின்பக்க சுவர் வழியாக ஏறிக்குதித்தான். அங்கிருந்த சிலர் அவனைத் தடுத்தனர்.
அந்த இடத்தில் மத்திய தொழில்பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் இருந்தார். அவரும் அந்தச் சிறுவனை தடுத்தார். இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென கைத்துப்பாக்கியை எடுத்த வீரர், சிறுவனை சுட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவனை, அருகில் உள்ள ஹெட்கேவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஷாஹ்தாரா போலீசார், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பணியாற்றும் மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை வீரரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை நடக்கிறது.

