மடாதிபதிகள் இடையில் அதிகார மோதல் கதக் சிவானந்தா மடத்தின் தேரோட்டம் ரத்து
மடாதிபதிகள் இடையில் அதிகார மோதல் கதக் சிவானந்தா மடத்தின் தேரோட்டம் ரத்து
ADDED : மார் 10, 2024 06:22 AM
கதக்: மடாதிபதிகளின் இடையிலான அதிகார மோதலால், கதக் சிவானந்தா மடத்தின் தேரோட்டம், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கதக்கில் சிவானந்தா மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரிக்கு மறுநாள், தேரோட்டம் நடப்பது வழக்கம்.
இதில் கதக் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களை சேர்ந்த, பக்தர்களும் திரளாக கலந்து கொள்வர். இதுவரை 104 ஆண்டுகள் தேரோட்டம் நடந்து உள்ளது.
இந்த மடத்தின் மூத்த மடாதிபதி அபினவ சிவானந்த சுவாமிக்கும், இளைய மடாதிபதி சதாசிவானந்த பாரதி சுவாமிக்கும் இடையில், கடந்த சில நாட்களாக பிரச்னை உள்ளது. அதாவது மடத்தை நிர்வகிப்பது யார் என்று, இருவருக்கும் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது.
சிவராத்திரிக்கு மறுநாளான நேற்று, மடத்தின் தேரோட்டத்திற்கான பணிகள் மும்முரமாக நடந்து வந்தன.
ஆனால் தேரோட்டத்தை முன்நின்று நடத்துவது யார் என, அபினவ சிவானந்த சுவாமி, சதாசிவானந்த பாரதி சுவாமிக்கும் போட்டி ஏற்பட்டது. இருவரின் பக்தர்களும், தங்களது மடாதிபதிகளுக்கு ஆதரவாக பேச துவங்கினர். தேரோட்டத்தின்போது, பிரச்னை வரலாம் என்று கருதப்பட்டது.
சுதாரித்துக் கொண்ட, கதக் தாசில்தார் சீனிவாஸ் மூர்த்தி, தேரோட்டம் நடத்த தற்காலிக தடை விதித்து, நேற்று காலை உத்தரவிட்டார். அசம்பாவித சம்பவங்களை தடுக்க, மடத்தை சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மடாதிபதிகள் இடையிலான மோதலால், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

