ADDED : ஜன 27, 2026 01:29 AM
பரேலி: உத்தர பிரதேசத்தில் அரசு கொள்கைகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரேலி நகரின் துணை கலெக்டர் அலங்கார் அக்னிஹோத்ரி, 45, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள, பரேலி நகரின் சப் - கலெக்டராக பணியாற்றி வந்தவர், அலங்கார் அக்னிஹோத்ரி. 2019ம் ஆண்டு, பிராந்திய சிவில் சர்வீசஸ் அதிகாரியான இவர், கான்பூரைச் சேர்ந்தவர்.
சமீபகாலமாக, நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் சில முடிவுகள் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளதாக கருதியதால், தன் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. தன் ராஜினாமா கடிதத்தை உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேலுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.
அரசின் சில கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுடன் தன்னால் ஒத்துப்போக முடியவில்லை என்றும், அரசு அதிகாரியாக பணியாற்றும் போது தன் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட விரும்பவில்லை என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

