ரூ.1.6 கோடி தங்கம் கடத்தல் துாய்மை பணியாளர்கள் கைது
ரூ.1.6 கோடி தங்கம் கடத்தல் துாய்மை பணியாளர்கள் கைது
ADDED : அக் 20, 2025 01:23 AM

மும்பை: மஹாராஷ்டிராவில், 1.6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற மும்பை விமான நிலைய துாய்மை பணியாளர்கள் இருவரை, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இங்கு வெளிநாடுகளில் இருந்து மறைத்து எடுத்து வரப்படும் தங்கம், விமான நிலைய ஊழியர்கள் மூலம் எளிதாக வெளியே எடுத்து வரப்படுவதாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு தகவல் கிடைத்தது.
இ தன்படி நேற்று முன்தினம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அவர்களை பார்த்ததும், விமான நிலையத்தின் துாய்மை பணியாளர் ஒருவர், படிக்கட்டில் ஒரு பொட்டலத்தை கீழே போட்டு விட்டு அவசரமாக ஓடினார்.
அந்த பொட்டலத்தை மீட்ட அதிகாரிகள், வெள்ளை துணிக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்த மெழுகு வடிவிலான தங்கத்துாளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட துாய்மை பணியாளரை கைது செய்தனர்.
விசாரணையில், விமானத்தில் இருந்து தங்கத்தை எடுத்து வந்து, தன் மேற்பார்வையாளர் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். இதை அடுத்து, மேற்பார்வையாளரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, மொத்தம் 1.2 கிலோ எடையுள்ள, 1.6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.