யு.பி.எஸ்.சி.,யை பின்பற்றி தேர்வு கே.பி.எஸ்.சி.,க்கு முதல்வர் அறிவுரை
யு.பி.எஸ்.சி.,யை பின்பற்றி தேர்வு கே.பி.எஸ்.சி.,க்கு முதல்வர் அறிவுரை
ADDED : செப் 26, 2024 06:28 AM
பெங்களூரு: ''அரசு பணியிடங்கள் நிரப்புவதில், மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., போன்று, கே.பி.எஸ்.சி., தேர்வு முறை இருக்க வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
கர்நாடக அரசின் வெவ்வேறு பணியிடங்கள் நிரப்புவது குறித்து, பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பல ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாதது குறித்து, அதிகாரிகளிடம், முதல்வர் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, கல்யாண கர்நாடகா மண்டலத்தில் பணியிடங்கள் நிரப்பாததால், கடும் கோபமடைந்தார்.
அப்போது, சித்தராமையா பேசியதாவது:
ஆண்டுதோறும் காலாகாலத்துக்கு காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்வு நடத்துவதற்கான அட்டவணை வெளியிட வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட கூடாது.
மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., போன்று, கே.பி.எஸ்.சி., தேர்வு முறை இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் தேர்வுகளை முடிக்க வேண்டும். மற்ற தேர்வுகளை கருத்தில் கொண்டு, கே.பி.எஸ்.சி., தேர்வு தேதி நிர்ணயிக்க வேண்டும்.
கல்யாண கர்நாடகா மண்டலத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் உள்ள குழப்பத்தை சரி செய்து, அமைச்சரவை துணை கமிட்டி சிபாரிசு படி தேர்வு நடத்த வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பணியிடங்கள் நிரப்புவது குறித்து, வாரந்தோறும் துறை முக்கியஸ்தர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். அடுத்த வாரம் மீண்டும் ஆலோசனை நடத்தப்படும். அதற்குள் காலியாக உள்ள அரசு பணியிடங்கள், தாமதம் செய்வதற்கான காரணங்கள் உட்பட முழு அறிக்கை தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.