கனவில் வந்தார் கெஜ்ரிவால்; கம்பி கட்டும் கதை சொல்லி கட்சியில் மீண்டும் சேர்ந்தார் ஆம் ஆத்மி மாஜி எம்.எல்.ஏ,.
கனவில் வந்தார் கெஜ்ரிவால்; கம்பி கட்டும் கதை சொல்லி கட்சியில் மீண்டும் சேர்ந்தார் ஆம் ஆத்மி மாஜி எம்.எல்.ஏ,.
ADDED : ஆக 30, 2024 08:28 AM

புதுடில்லி: டில்லி கவுன்சிலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராம் சந்தர் சில தினங்களுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது மீண்டும் ஆம்ஆத்மியில் இணைந்து விட்டார். 'ஜெஜ்ரிவால் கனவில் வந்தார். பா.ஜ.,வில் சேர்ந்ததற்கு திட்டினார்' என்பது தான் அவர் கூறும் காரணம்.
டில்லி கவுன்சிலர் ராம் சந்தர், மீண்டும் ஆம் ஆத்மியில் இணைந்த பிறகு கூறியதாவது: நான் ஆம்ஆத்மி கட்சியின் ராணுவ வீரர். பா.ஜ.,வில் இணைந்தது நான் எடுத்த தவறான முடிவு. எனது குடும்பத்தினர் எடுத்து சொல்லி புரிய வைத்தனர். இதனால் மீண்டும் ஆம்ஆத்மிக்கு திரும்பி விட்டேன்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கனவில் வந்தார். என்னை திட்டினார். ராம் சந்தர் எழுந்து, 'மணிஷ் சிசோடியா, கோபால் ராய், சந்தீப் மற்றும் அனைத்து தலைவர்களையும் சந்தித்து தொகுதி மக்கள், தொழிலாளர்களை சந்தித்து பேசுங்கள். மக்களுக்கு பணியாற்றுங்கள்' என்று உத்தரவிட்டார்.
உறுதிமொழி
முதல்வர் கெஜ்ரிவாலின் வார்த்தைகளால் இனி ஆம்ஆத்மியில் இருந்து விலக மாட்டேன். எதிர்காலத்தில் நான் யாராலும் தவறாக வழிநடத்தப்பட மாட்டேன் என்று இன்று உறுதிமொழி எடுத்து கொள்கிறேன். பா.ஜ.,வில் சிறிது காலம் இணைந்து பணியாற்றியதற்கு வருந்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
சிசோடியா மகிழ்ச்சி
ஆம்ஆத்மி கட்சியில் ராம் சந்தர் மீண்டும் இணைந்தது குறித்து முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ''எங்கள் பழைய ஆம் ஆத்மி சகாவும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராம்சந்தரை நான் இன்று சந்தித்தேன். அவர் ஆம் ஆத்மி குடும்பத்திற்குத் திரும்பியுள்ளார்'' என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.