மூடநம்பிக்கைக்கு சவால் விடும் முதல்வர் சாம்ராஜ்நகருக்கு இன்று சுற்றுப்பயணம்
மூடநம்பிக்கைக்கு சவால் விடும் முதல்வர் சாம்ராஜ்நகருக்கு இன்று சுற்றுப்பயணம்
ADDED : மார் 12, 2024 03:33 AM

சாம்ராஜ்நகர்: மூட நம்பிக்கையை பொருட்படுத்தாத முதல்வர் சித்தராமையா, முதல்வரான பின் இரண்டாவது முறையாக இன்று சாம்ராஜ்நகருக்கு வருகிறார்.
பொதுவாக முதல்வர் பதவியில் உள்ளவர்கள், சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வந்தால், பதவி பறிபோகும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு முன்பு முதல்வராக இருந்தவர்கள், சாம்ராஜ்நகருக்கு செல்ல அஞ்சுவர். பதவிக்காலம் முடியும் வரை, சாம்ராஜ்நகரில் கால் பதிக்காத முதல்வர்களே அதிகம்.
ஆனால் சித்தராமையா, இந்த மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்து, பல முறை சாம்ராஜ்நகருக்கு சென்றுள்ளார். முதன்முறை முதல்வரானபோது, 15க்கும் அதிகமான முறை சென்றிருந்தார். ஐந்து ஆண்டு தடங்கல் இன்றி ஆட்சியை நிறைவு செய்தார்.
இரண்டாவது முறை முதல்வரான பின், ஏற்கனவே ஒருமுறை சாம்ராஜ்நகர் சென்றுள்ளார். இன்று மீண்டும் அங்கு செல்கிறார். சாம்ராஜ்நகரின், ஹெக்கவாடி கிராமத்தில், முன்னாள் எம்.பி., துருவ நாராயணா முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி, இன்று நடக்கிறது.
இதில் பங்கேற்க, காலை 11:30 மணிக்கு ஹெலிகாப்டரில் முதல்வர் சித்தராமையா செல்கிறார். துணை முதல்வர் சிவகுமார் உட்பட சில அமைச்சர்கள் செல்கின்றனர்.
மதியம் 3:00 மணிக்கு, சாம்ராஜ்நகரின், அம்பேத்கர் விளையாட்டு அரங்கில் வாக்குறுதி பயனாளிகள் மாநாடு நடக்கிறது. இதில் முதல்வர் பங்கேற்கிறார்.
மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, விளையாட்டு அரங்கில் இரண்டு ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகளை சாம்ராஜ்நகருக்கு அழைத்து வர, பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

