பத்ரா திட்டத்துக்கு ரூ.5,300 கோடி பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்
பத்ரா திட்டத்துக்கு ரூ.5,300 கோடி பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்
ADDED : ஜன 26, 2025 11:03 PM

பெங்களூரு: 'பத்ரா மேலணை திட்டத்துக்கு, மத்திய அரசின் பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதம்:
கடந்த 2023 - 24ம் ஆண்டின், மத்திய அரசு பட்ஜெட்டில், பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்து, 5,300 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக கூறப்பட்டது.
ஆனால், இதுவரை நிதியுதவி வழங்கவில்லை. இந்த ஆண்டாவது நிதியை வழங்கும்படி, நிதி மற்றும் ஜல்சக்தி துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பத்ரா மேலணை திட்டத்தால், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, துமகூரு, தாவணகெரே மாவட்டங்களின், 5 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் பகுதிகளுக்கு, நீர்ப்பாசன வசதி கிடைக்கும். 367 ஏரிகளுக்கு நீர் நிரம்பும். 2008ல் பணிகள் துவங்கப்பட்டது. இதுவரை 10,212.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பத்ரா மேலணை திட்டத்துக்கு, ஜல்சக்தி துறையின் ஆலோசனை கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தில் 16,125 கோடி ரூபாய் முதலீடு செய்ய, 2021ன் மார்ச்சில் 15வது முதலீடு கமிட்டி அனுமதி அளித்தது. உயர்மட்ட கமிட்டியும், இத்திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்கும்படி சிபாரிசு செய்துள்ளது.  கடந்த 2023 - 24ன், மத்திய பட்ஜெட்டில் பத்ரா மேலணை திட்டத்துக்கு 5,300 கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டது.
ஆனால் தேசிய திட்டமாக அறிவிப்பது தாமதமாகிறது. மத்திய அரசு நிதி வழங்காததால், திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பணிகளை துவக்க மத்திய அரசு 5,300 கோடி ரூபாய் வழங்குவது அவசயம்.
பல ஆண்டுகளாக மழை பற்றாக்குறையால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர். விவசாயிகளின் நலனை பாதுகாக்க, பத்ரா திட்டத்தை கூடுமானவரை விரைவில் முடிக்க வேண்டும்.
2025 - 26ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும். வறட்சி பாதிப்பு மாவட்டங்களின் விவசாயிகள், மக்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

