சிறையில் அதிகாரியை தாக்கிய கோவை குண்டுவெடிப்பு கைதி
சிறையில் அதிகாரியை தாக்கிய கோவை குண்டுவெடிப்பு கைதி
ADDED : நவ 15, 2025 12:24 AM
திருவனந்தபுரம்: கேரள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோவை குண்டு வெடிப்பு வழக்கு கைதி, சிறை அதிகாரியை தாக்கினார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் விய்யூரில் மத்திய சிறை உள்ளது. இங்கு பல முக்கிய வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான அசாருதீன் 36; மாவோயிஸ்ட் மனோஜ் 27; ஆகியோரும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
கைதிகள் நேற்று முன்தினம் அவர்கள் அறையில் இருந்து பல்வேறு பணிகளுக்காக திறந்து விடப்பட்டனர். மாலை 6.00 மணிக்கு அவர்களை அறைக்கு திரும்ப அழைத்துச் சென்றபோது உதவி சிறை அதிகாரி அபிநவை, அசாருதீன் தாக்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக மாவோயிஸ்ட் மனோஜ் கோஷங்கள் எழுப்பினார்.
சிறை அறைக்குள் இருந்த மற்றொரு கைதி ரெஜிகுமார் மோதலை தடுக்க வந்தபோது அவரும் தாக்கப்பட்டார். இதில் அபிநவ் மற்றும் ரெஜிகுமார் காயம் அடைந்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கூடுதல் போலீசார் வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

