ADDED : மே 03, 2025 04:28 AM

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோங்காடு, ஆலத்தூர் சட்டசபை தொகுதிகளில் எம்.எல்.ஏ., நிதியில் இருந்து நிறுவப்பட்ட, மின்விளக்கு கம்பங்களில், ஒளிரும் வகையில் எம்.எல்.ஏ.,களின் போட்டோக்கள் வைக்கப்பட்டன. இதற்கு எதிராக, மாவட்ட கலெக்டர் பிரியங்காவிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை பரிசீலனை செய்த மாவட்ட கலெக்டர், பாலக்காட்டில் மின்கம்பங்களில் நிறுவப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களின் போட்டோக்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து புகார்தாரர் போபன் கூறியதாவது:
எம்.எல்.ஏ., நிதியை பயன்படுத்தி, மின்விளக்கு கம்பங்கள் நிறுவும் போது எம்.எல்.ஏ., போட்டோக்களுடன் ஒளிரும் போர்டுகள் வைக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால், இந்த சட்டத்தை மீறி உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ் உள்ளிட்டவர்களின் போட்டோக்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஒளிரும் வகையில் போட்டோ வைக்கும் போது, 15 நாட்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோதமான இது போன்ற விளம்பர போர்டுகளை அகற்றி, நிறுவிய நாள் முதல் இதுவரை இதற்காக பயன்படுத்திய மின்சாரக் கட்டண தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும் என, கலெக்டரிடம் புகார் அளித்தேன். அதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினார்.

