பாக்., ஆதரவு நிலையிலிருந்து கொலம்பியா அரசு மாற்றம்
பாக்., ஆதரவு நிலையிலிருந்து கொலம்பியா அரசு மாற்றம்
ADDED : ஜூன் 01, 2025 01:07 AM
போகோடா: இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என அந்நாட்டுக்கு சென்ற நம் எம்.பி.,க்கள் விளக்கியதை அடுத்து, அந்த இரங்கல் அறிக்கையை வாபஸ் பெறுவதாக கொலம்பியா அரசு அறிவித்தது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமிற்குள் நுழைந்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஏப்., 22ல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாக்., அரசு பொய் பரப்பியது.
இதையடுத்து, தென் அமெரிக்க நாடான கொலம்பியா, 'இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்' என அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கான காரணம் குறித்தும், பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகள் பற்றியும் சர்வதேச நாடுகளுக்கு விளக்க, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் பங்குபெற்றுள்ள ஏழு குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது.
இதில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியாவுக்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலாண்டாவை சந்தித்து பேசினர்.
இதன்பின், சசி தரூர் வெளியிட்ட அறிக்கை:
ஆப்பரேஷன் சிந்துார் குறித்து நம் நாட்டின் நியாயத்தை வெளிப்படுத்தினேன். மே 8 அன்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக இரங்கல் தெரிவித்து, கொலம்பியா அறிக்கை வெளியிட்டது வருத்தம் அளிப்பதாகக் கூறினேன்.
இதையடுத்து, அந்த அறிக்கையை திரும்பப் பெறுவதாக கொலம்பியா அரசு அறிவித்துள்ளது. நம் நாட்டின் நிலைப்பாட்டை தற்போது சரியாக புரிந்துகொண்டதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கொலம்பியா அமைச்சர் உறுதியளித்தார்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.