ஆப்கனுடன் வர்த்தகத்திற்கு தடை; தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட பாகிஸ்தான்
ஆப்கனுடன் வர்த்தகத்திற்கு தடை; தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட பாகிஸ்தான்
UPDATED : டிச 01, 2025 04:34 PM
ADDED : டிச 01, 2025 03:47 PM

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் தடை விதித்த நிலையில், அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விலைவாசிகளும் தாறுமாறாக உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லையில் நடந்த மோதலுக்குப் பிறகு, கடந்த சில தினங்களாகவே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ரத்தமும், வர்த்தகமும் ஒன்றாக நடக்காது என்று பாகிஸ்தானின் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார். அதாவது, ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.
கடந்த அக்.,11ம் தேதி முதல் ஆப்கனுடனான எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்தி விட்டது. இதனால், உஷாரான ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் தங்களின் வர்த்தகத்தை திசைதிருப்பியுள்ளது. இது ஏற்கனவே பலவீனமாக உள்ள பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தானின் சிமென்ட் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆப்கானிஸ்தானில் இருந்து கரி இறக்குமதி தடைபட்டு போனதால், தென்ஆப்ரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து, கரியை வாங்க வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் மருந்து நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.1,675 கோடி மதிப்பிலான மருந்துகளை ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வந்தன. தற்போது அதுவும் தேக்கமடைந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பழங்கள், காய்கறிகளும் ஏற்றுமதி செய்து வந்து நிலையில், தற்போது அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பல துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு, விலை உயர்வை சந்தித்துள்ளன.
பாகிஸ்தானின் இந்த முடிவு கைபர் பக்துன்வா மாகாணத்தில் அதிகம் வாழும் ஆப்கானிஸ்தான் பூர்வகுடி மக்களான பஷ்தூனர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, கடந்த நவ., மாதத்தின் தொடக்கத்தில் ஆப்கன் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் முல்லா கானி பரதார், பாகிஸ்தானுக்கு பதிலாக உடனடியாக மாற்று வர்த்தக நாடுகளை தேடுமாறு, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

