கடற்படைக்கு தயாராகும் 63 கப்பல்கள் தலைமை தளபதி திரிபாதி தகவல்
கடற்படைக்கு தயாராகும் 63 கப்பல்கள் தலைமை தளபதி திரிபாதி தகவல்
ADDED : அக் 15, 2024 01:53 AM
புதுடில்லி, ''நம் கடற்படைக்காக, 63 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன,'' என, கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு, கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிபாதி நேற்று அளித்த பேட்டி:
பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் நலிவடைந்துள்ளது. சர்வதேச நாடுகளிடம் உதவி கேட்டு அந்நாடு கெஞ்சி வருகிறது. அப்படியிருக்கையில், தங்கள் ஆயுதப் படைகளை நவீனப்படுத்த பாக்., எப்படி நிதியை திரட்டுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அந்நாட்டு கடற்படையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பல்வேறு ஆதாரங்களில் இருந்து என்ன வகையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை அந்நாடு பெற்று வருகிறது என்பது குறித்தும் கவனித்து வருகிறோம்.
சீனாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். நம் கடற்படைக்காக, 63 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணியில், பொதுத்துறை நிறுவனங்களும், 'எல் அண்டு டி' போன்ற தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
வரும் 2047ம் ஆண்டுக்குள், நம் கடற்படை சுயசார்பு படையாக மாறும். அந்த இலக்கை நோக்கி மத்திய அரசும், கடற்படையும் பயணித்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.