தகவல் உரிமை சட்டம் பற்றி பாடம் கர்நாடக அரசுக்கு கமிஷன் சிபாரிசு
தகவல் உரிமை சட்டம் பற்றி பாடம் கர்நாடக அரசுக்கு கமிஷன் சிபாரிசு
ADDED : ஜூலை 13, 2025 03:54 AM

பெங்களூரு: 'அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வரவும், ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தை, மேலும் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
'பி.யு.சி., மற்றும் பட்டப்படிப்பு மாணவர்கள் பாடங்களில் சேர்க்க வேண்டும்' என, கர்நாடக தகவல் உரிமை கமிஷன், மாநில அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது.
இதுகுறித்து, அரசுக்கு தகவல் உரிமை ஆணையம் செய்த சிபாரிசுகள்:
தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து, 20 ஆண்டுகளாகியும், அரசு அதிகாரிகள், ஊழியர்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.
'கன்மேன்' பாதுகாப்பு
எனவே இது பற்றி பி.யு.சி., மற்றும் பட்டப்படிப்பு பாடங்களில், பாடமாக சேர்க்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன், கர்நாடக தேர்வாணையம் உட்பட பல்வேறு துறைகள் அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க நடத்தும் தேர்வுகளில், தகவல் உரிமை சட்டத்தை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும்.
இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பதவி உயர்வு, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு பல்வேறு விஷயங்களில் பயிற்சி அளிப்பது போல, மாவட்ட பயிற்சி மையம், மைசூரின் நிர்வாக பயிற்சி மையம், பெங்களூரின் பயிற்சி மையம் என, பல மையங்களில் நடக்கும் பயிற்சிகளில், தகவல் உரிமை சட்டமும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறையில் இச்சட்டம் இருந்தும், சரியாக பயன்படுத்துவது இல்லை. தகவல் உரிமை கமிஷனருக்கு, 'கன்மேன்' பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கர்நாடக தகவல் உரிமை கமிஷனில், நிரந்தர ஊழியர்களே இல்லை; ஒப்பந்த ஊழியர்கள் தான் பணியாற்றுகின்றனர்.
உயர்மட்ட கூட்டம்
அரசு கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையில், வரும் 14ம் தேதி, தகவல் உரிமை சட்டம் தொடர்பான, உயர்மட்ட கூட்டம் நடக்கவுள்ளது.
இதில் தகவல் அறியும் உரிமை கமிஷனின் சிபாரிசுகள் பற்றியும் ஆலோசித்து, முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.