விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் உறுதி: பிரதமர் மோடி
விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் உறுதி: பிரதமர் மோடி
UPDATED : ஜன 01, 2025 10:13 PM
ADDED : ஜன 01, 2025 06:53 PM

புதுடில்லி: '' விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் பா.ஜ., அரசு முழு ஈடுபாட்டுடன் உறுதியாக உள்ளது ,''எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பயிர்காப்பீட்டுத் திட்டமான 'பிரதமர் பசல் பீமா யோஜனா(PMFBY)' மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. காப்பீடு செய்த விளை நிலங்களில் இயற்கை பேரழிவு மற்றும் பிற அறிவிக்கப்பட்ட அபாயங்கள் காரணமாக பயிர் இழப்பு ஏற்பட்டால், காப்பீடு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த திட்டத்தை 2025 - 2026ம் நிதியாண்டு வரை தொடர்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் பிறகு நிருபர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இந்த திட்டத்தின் கீழ் , விரைவாக ஆய்வு செய்து காப்பீடு வழங்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கு ரூ.800 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. விவசாயிகளுக்கு டிஏபி உரம் 50 கிலோ கொண்ட மூடை ரூ.1,350க்கு வழங்கப்படும். மற்ற நாடுகளில் இதன் விலை ரூ.3 ஆயிரம். இதற்காக மத்திய அமைச்சரவை ரூ.3,850 கோடி ஒதுக்கியுள்ளது. சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள், விவசாயிகளை பாதிக்கக்கூடாது என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். 2014- 24 வரை உரத்திற்கான மானியமாக ரூ.11.9 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது 2004- 14 காலகட்டத்தை விட இரு மடங்கு ஆகும். இவ்வாாறு அவர் கூறினார்.
காப்பீடு திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் பா.ஜ., அரசு முழு ஈடுபாட்டுடன் உள்ளது. நமது தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக பாடுபடும் அனைத்து விவசாய சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்காக பெருமைப்படுகிறோம்.நடப்பு 2025ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டமானது, விவசாயிகளின் செழிப்பை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

