மூதாட்டியிடம் செயின் பறித்த கம்யூ., கவுன்சிலர் கைது
மூதாட்டியிடம் செயின் பறித்த கம்யூ., கவுன்சிலர் கைது
ADDED : அக் 19, 2025 12:30 AM
கண்ணுார்: கேரளாவில் தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, தங்கச் சங்கிலியை பறித்த மார்க்சிஸ்ட் கம்யூ., கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள கண்ணுார் மாவட்டம், கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஜானகி, 77. சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த அவர், சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, 'ஹெல்மெட்' அணிந்த நபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தார்; ஜானகி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதையடுத்து, ஜானகி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தப்பிய திருடனை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர் தப்பி சென்றார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.
அப்போது மூதாட்டியிடம் நகையை திருடியது, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த நான்காவது வார்டு கவுன்சிலர் ராஜேஷ் என தெரிய வந்தது. ராஜேஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, கட்சியில் இருந்து ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளார்.