'பா.ஜ., அரசின் குறைகளை மக்கள் மத்தியில் மறைப்பதற்காகவே ஆம் ஆத்மி மீது புகார்'
'பா.ஜ., அரசின் குறைகளை மக்கள் மத்தியில் மறைப்பதற்காகவே ஆம் ஆத்மி மீது புகார்'
ADDED : ஜூன் 19, 2025 07:07 PM
புதுடில்லி:'முந்தைய ஆம் ஆத்மி அரசின், பள்ளிக்கூட வகுப்புகள் கட்டுவதில் முறைகேடு என்பது, தற்போதைய டில்லி அரசின் குற்றங்களை பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைப்பதற்காகவே. அரசியல் காரணங்களுக்காகவே அத்தகைய புகார்கள் கூறப்படுகின்றன' என, ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை, டில்லி மாநில அரசின் ஆளுகையின் கீழ் உள்ள பல இடங்களில், அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் பலர் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மொத்தம், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு முந்தைய ஆம் ஆத்மி அரசு, பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் படி, நாட்டின் தலைநகர் டில்லி உள்ளிட்ட பல இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
எனினும், அந்த சோதனையில் சிக்கிய பொருட்கள், ஆவணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பின், நள்ளிரவில், ஆம் ஆத்மி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முந்தைய ஆம் ஆத்மி அரசின் பள்ளிக்கூட வகுப்பறை கட்டுவதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக, இப்போதைய பா.ஜ., அரசின் மேற்பார்வையில், பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பா.ஜ., அரசின் குறைகளை பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைக்கவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட அந்த சோதனைகளில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக எவ்வித ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரியவில்லை.
தொடந்து, டில்லியின் குடிசைப்பகுதிகள் இடித்து தள்ளப்படுகின்றன. ஏழைகள் மற்றும் அதற்கு கீழான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்த உண்மையை மக்கள் மத்தியில் இருந்து மறைப்பதற்காகவே இதுபோன்ற செயல்களை பா.ஜ., அரசு செய்துள்ளது.
எல்லா முனைகளிலும், மாநிலத்தில் ஆளும் பா.ஜ., அரசு தோல்வி அடைந்து விட்டது. மழை பெய்தால் போதும், நகரமே வெள்ளக்காடாக மாறி விடுகிறது. அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பல தனியார் பள்ளிகள், பள்ளி கட்டணத்தை தங்கள் இஷ்டத்திற்கு உயர்த்திவிட்டன. அதை கண்டும், காணாமல் இருக்கிறது, பா.ஜ., அரசு. இந்த அரசுக்கு எதிராக கூறப்படும் புகார்களை மறைப்பதற்காகவே, எங்கள் அரசின் போது பள்ளிக்கூட கட்டடங்கள் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.