ADDED : பிப் 02, 2024 11:15 PM

பெங்களூரு: மக்களை மிரட்டுவதாக கூறி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா மீது, கர்நாடகா தேர்தல் கமிஷனில், ம.ஜ.த., புகார் செய்து உள்ளது.
மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனாவிடம், ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தலைமையில், ம.ஜ.த.,வினர் புகார் அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றால், அரசின் ஐந்து வாக்குறுதிகளால் எந்த பயனும் இல்லை என்று அர்த்தம். இதனால் வாக்குறுதிகளை ரத்து செய்ய வேண்டும் என்று, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறி உள்ளார். இதன்மூலம் மக்களை மிரட்டி உள்ளார். இதனால் அவரது எம்.எல்.ஏ., பதவி, காங்கிரஸ் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதன்பின்னர் நிகில் அளித்த பேட்டியில், ''வாக்குறுதி திட்டங்களுக்காக தான், காங்கிரசுக்கு, மாநில மக்கள் ஆட்சி, அதிகாரம் வழங்கினர். ஆனால் இப்போது வாக்குறுதிகளை ரத்து செய்வோம் என்று கூறி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., மக்களை மிரட்டுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்து உள்ளோம்,'' என்றார்.

