'ரெபெக்ஸ்' நிறுவனம் ரூ.1,112 கோடி மோசடி; வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்
'ரெபெக்ஸ்' நிறுவனம் ரூ.1,112 கோடி மோசடி; வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்
ADDED : டிச 12, 2025 06:40 AM

சென்னை: 'ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தில், போலி கொள்முதல் ஆவணம் வாயிலாக, 1,112 கோடி ரூபாயை, கணக்கில் காண்பிக்காமல் ஏமாற்றியது, வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்துள்ளது.
சென்னை தியாகராய நகர், பசுல்லா சாலையில், 'ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது.
தொழிற்சாலைகள்
இந்நிறுவனம் சார்பில், நிலக்கரி இறக்குமதி, மின்சார கார்களுக்கான பேட்டரி தயாரிப்பு, குளிர்சாதன பெட்டிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நடத்தப்படுகின்றன. இந்நிறுவனத்தின் தலைவராக, அனில் ஜெயின் என்பவர் உள்ளார்.
இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. இந்நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக, வருமானத்தை குறைத்து காண்பித்து, வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், கடந்த 9ம் தேதி, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், இந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை செய்தனர். கடந்த மூன்று நாட்களாக நடந்த சோதனையில், 1,112 கோடி ரூபாயை கணக்கில் காட்டாததும், போலி கொள்முதல் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிலக்கரி கொள்முதலில் முறைகேடு செய்தற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மேலும், 53 பேரிடம் 382.68 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளனர். இதில், 15 பேர் வரி தாக்கல் செய்யாதவர்கள்.
மேலும், 37 பேர் தங்கள் கணக்குகளில், பணப் பரிவர்த்தனையை வெளிப்படுத்தவில்லை. எனவே, இந்நிறுவனத்தின் முதலீடு சட்டவிரோத பணப்பரிமாற்றமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பரிவர்த்தனை
இந்நிறுவனம், ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின், 'ஆஸ்ட்ரோ விஷ்' என்ற மருந்து நிறுவனத்தில், 258 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதே போல், 'டீ.என்., எனர்ஜி' என்ற நிறுவனத்தில், 115 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, உடனடியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் பிரதான பொறுப்பாளர், தனது கார் டிரைவர் பெயரில் நிறுவனம் துவங்கி, அதில் 8.5 கோடி ரூபாய் பணம் செலுத்தி, 200 கோடி ரூபாய்க்கு மேல், பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார். மேலும், 37 கோடி ரூபாயில் தனி விமானம், 10 கோடி ரூபாயில் உயர்ரக சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்துள்ளார்.
இந்நிறுவனத்துடன் தொடர்புடைய நிதியாளர் ராஜேஷ் சுரானா, 312 கோடி ரூபாயை 'ஆராத்யா இன்ப்ரா' என்ற கட்டுமான நிறுவனத்துக்கு கடனாக வழங்கி உள்ளார். ஹவாலா வழியாக, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

