மாண்டியா கலால் அதிகாரி மீது லோக் ஆயுக்தாவில் புகார்! மதுக்கடை உரிமத்திற்கு ரூ.40 லட்சம் கேட்டதாக 'திடுக்'
மாண்டியா கலால் அதிகாரி மீது லோக் ஆயுக்தாவில் புகார்! மதுக்கடை உரிமத்திற்கு ரூ.40 லட்சம் கேட்டதாக 'திடுக்'
ADDED : நவ 29, 2024 12:07 AM
மாண்டியா; மதுக்கடைக்கு உரிமம் வழங்க, 40 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக, மாண்டியா மத்துார் கலால் அதிகாரி மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கலால் துறையில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த புகார், கலால் துறை அமைச்சர் திம்மாபூருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக அரசின் கலால் துறை அமைச்சர் திம்மாபூர். இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன், கர்நாடக மதுபான விற்பனையாளர் சங்கத்தினர் கவர்னரிடம் பரபரப்பு புகாரை அளித்தனர்.
அதாவது, 1,000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளுக்கு சட்டவிரோதமாக உரிமம் வழங்கி, 300 கோடி முதல் 700 கோடி ரூபாய் வரை பணம் சம்பாதித்து உள்ளார் என்று அதில் குற்றம் சாட்டி இருந்தனர்.
* ரூ.18 கோடி
திம்மாபூர், வாரத்திற்கு 18 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கும் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் திம்மாபூரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், எதுவும் பேசாமல் முதல்வர் மவுனம் சாதித்தார்.
இதனால், கோபமடைந்த மது விற்பனையாளர்கள் சங்கத்தினர் கடந்த 20ம் தேதி மதுக்கடைகள் அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
* முதல்வர் உறுதி
இதையடுத்து கடந்த 19ம் தேதி, கர்நாடக மது விற்பனையாளர்கள் சங்கத்தினருடன், முதல்வர் பேச்சு நடத்தினார். கலால் அதிகாரிகள் தங்களிடம் லஞ்சம் கேட்டு தொல்லை கொடுப்பதாக, தங்கள் ஆதங்கத்தை கர்நாடக மது விற்பனையாளர்கள் சங்கத்தினர் கொட்டி தீர்த்தனர்.
நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வரும் உறுதியளித்து இருந்தார். ஆனாலும், அதிகாரிகளின் அட்டகாசம் இன்னும் நிற்கவில்லை. லஞ்சம் கேட்டு தொந்தரவு கொடுத்ததாக, கலால் அதிகாரி மீது லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
* விண்ணப்பம்
மாண்டியாவின் மத்துார், சந்துபூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமம்மா. இவரது பெயரில் மதுக்கடை திறக்க அனுமதி கேட்டு, அவரது மகன் புனித், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் விண்ணப்பித்தபோதும் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், கலால் அதிகாரி ரவிசங்கர் என்பவர், புனித்துக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
'உங்களுக்கு மதுக்கடை திறக்க உரிமம் வழங்க வேண்டும் என்றால் 40 லட்சம் ரூபாய் எனக்கு லஞ்சமாக தர வேண்டும்' என்று கேட்டுள்ளார். இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் லஞ்ச பணம் 20 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது.
தினமும் மொபைல் போனில் புனித்திடம் பேசி தனக்கு உடனடியாக லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ரவிசங்கர் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கடுப்பான புனித், ரவிசங்கர் மீது மாண்டியா லோக் ஆயுக்தா போலீசில் நேற்று புகார் செய்தார். இந்த புகாரில், கலால் அமைச்சர் திம்மாபூரின் பெயரும் இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின், அவரது பெயர் இல்லை என்பது உறுதியானது.
* சஸ்பெண்ட்
இது குறித்து திம்மாபூர் கூறுகையில், ''கலால் துறையை நேர்மையான முறையில் கையாண்டு வருகிறேன். ஆனால், சிலர் எனக்கு தொல்லை கொடுக்க நினைக்கின்றனர். எனது பெயரை களங்கப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது.
''மாண்டியாவில் மதுபான கடைக்கு உரிமம் வழங்க, 40 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டது பற்றி எனது கவனத்திற்கு வந்துள்ளது. அதிகாரி ரவிசங்கரிடம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அவர் மீது தவறு இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார். துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாரையும் காப்பாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை,'' என்றார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''மதுபான கடைக்கு உரிமம் வழங்க லஞ்சம் கேட்கப்பட்டது பற்றி, லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரை அதிகாரிகளை கவனித்துக் கொள்வர். போலீஸ் துறைக்கு ஏதாவது புகார் வந்தால், அந்த புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
***