கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு ; பனசங்கரி கோவில் நிர்வாகம் அசத்தல்
கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு ; பனசங்கரி கோவில் நிர்வாகம் அசத்தல்
ADDED : ஜன 03, 2024 11:24 PM

பெங்களூரு : சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் குப்பை மறுசுழற்சி மையத்தை பனசங்கரி கோவில் நிர்வாகம் துவங்கியுள்ளது.
குப்பை பிரச்னையால் சிக்கித் தவிக்கும் விஷயத்தில், கோவில்களும் விதிவிலக்கல்ல. இங்கு உருவாகும் பூக்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட கழிவுகளை, அப்புறப்படுத்துவது பெரும் தலைவலியாக உள்ளது.
பெங்களூரின் பனசங்கரி கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. அதிகமான வருவாய் கொண்ட கோவில்களில் இதுவும் ஒன்று. தினமும் இங்கு நுாற்றுக்கணக்கான கிலோ கழிவு உருவாகிறது.
அன்னதான பவனில் உருவாகும் ஈரக்குப்பையை அப்புறப்படுத்துவது, பெரும் சவாலாக இருந்தது. தற்போது இந்த குப்பை, உரமாக மாற்றப்படுகிறது.
கோவில் வளாகத்தில், 28.17 லட்சம் ரூபாய் செலவில், குப்பை மறு சுழற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உலர்ந்த, ஈரக்கழிவை பயன்படுத்தி, நான்கு மாதங்களில் 400 கிலோவுக்கும் அதிகமான உரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில் அதிகாரிகள் கூறியதாவது:
கோவில் வளாகத்தில், 1,515 அடி பரப்பளவில், 24.69 லட்சம் ரூபாய் செலவில், குப்பை மறு சுழற்சி மையம் அமைக்கப்பட்டது. 3.48 லட்சம் ரூபாய் செலவில் உரம் தயாரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தை கோவில் நிர்வாகமே ஏற்றுள்ளது. நான்கு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
கோவிலில் உருவாகும் பூக்கள், மரங்களில் இருந்து உதிரும் காய்ந்த சருகுகள், அன்னதான பவனின் உருவாகும் காய்கறி தோல், மிச்சமான உணவை பயன்படுத்தி, உரம் தயாரிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே போன்று குப்பை மறு சுழற்சி மையத்துடன், இயற்கை எரிபோருள் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டது.
இதை நிர்வகிக்கும் பொறுப்பை, தனியார் நிறுவனம் ஏற்றிருந்தது. ஆனால் அந்நிறுவனம் சரியாக நிர்வகிக்காததால், எரிபொருள் தயாரிப்பு பணி பாதியில் நின்றது. தற்போது குப்பை மறு சுழற்சி மையத்தை, கோவில் நிர்வாகமே ஏற்றுள்ளது.
கோவிலில் எலுமிச்சை பழம் விளக்கேற்றும் பலரும், பாக்கு தட்டில் விளக்கை கொண்டு வருகின்றனர். விளக்கை ஏற்றிய பின், தட்டுகளை அங்கேயே வைத்துச் செல்கின்றனர்.
இதனால் குப்பை மிக அதிகமாக உற்பத்தியாகிறது. ஆனால் பாக்கு தட்டுகளை உரம் தயாரிக்க பயன்படுத்த முடியாது. எனவே பாக்கு தட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்தே, தட்டு கொண்டு வந்து விளக்கேற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.
பனசங்கரி கோவிலில், வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி உட்பட, மற்ற சிறப்பு நாட்களில் பக்தர்கள் எலுமிச்சை பழத்தால் விளக்கேற்றுகின்றனர். இதனால் நுாற்றுக்கணக்கான லிட்டர் எலுமிச்சை ரசம் உற்பத்தியாகிறது. இந்த ரசம் மஞ்சள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
கோவில் வளாகத்தில், 150 கேன்கள் வைக்கப்பட்டுள்ளன. மடம் ஒன்றின் ஊழியர்கள் மாதம் ஒரு முறை, 24,000 ரூபாய் கொடுத்து எலுமிச்சை ரசத்தை வாங்கிச் செல்கின்றனர். இதனால் வருவாய் கிடைக்கிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், பிளாஸ்டிக் கவர்களில் பூஜை பொருட்கள், எலுமிச்சை பழங்கள் கொண்டு வந்து, கண்ட இடங்களில் கவர்களை வீசுகின்றனர். எனவே கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூடை அல்லது துணிப்பைகளில் பூஜை பொருட்கள் கொண்டு வரும்படி கூறப்பட்டுள்ளது.
மனதுக்கு நிம்மதி, அமைதி தேடி வரும் கோவில் புனிதமான இடமாகும். இந்த இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, பக்தர்களின் கடமை. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள விதிகளை பின்பற்றுவது கட்டாயம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.