UPDATED : மார் 16, 2024 12:22 AM
ADDED : மார் 14, 2024 11:32 PM

'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்தலாம் என்று முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்திய அரசியலை அடியோடு புரட்டிப் போடக்கூடிய இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை, 19,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் குழு விவரித்துள்ளது.
லோக்சபா, சட்டசபை மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த செப்டம்பரில் உயர்நிலை குழுவை மத்திய அரசு அமைத்தது.
65 கூட்டங்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதிக் குழுவின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், லோக்சபா முன்னாள் செயலர் சுபாஷ் கஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் குழுவில் இடம்பெற்றனர்.
இந்த குழு ஆறு மாதங்களில் நாடெங்கும் 65 கூட்டங்களை நடத்தி, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது; பொதுமக்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான யோசனைகளை சேகரித்தது.
பிரச்னைகள்
அதன் முடிவில், 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. அதை ஜனாதிபதியிடம், முன்னாள் ஜனாதிபதி நேற்று வழங்கினார்.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
நாடு சுதந்திரம் அடைந்த பின், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடந்தது. காலப்போக்கில் பல காரணங்களால் அது மாறியது. ஒவ்வொரு சட்டசபைக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் தேர்தல் நடப்பதால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் வெவ்வேறு மாநிலங்களில் வேறு வேறு காலங்களில்நடக்கின்றன.
எங்காவது ஏதாவது தேர்தல் நடக்காத ஆண்டே இல்லை என்பதால், தொழில்கள் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. வழிகாட்டு விதிகளை அடிக்கடி அமல்படுத்துவதால், அரசு நிர்வாகம் தொடர்ச்சியாக செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. அடுத்தடுத்து தேர்தல் நடப்பதால் அரசுக்கும், கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிகம் செலவாகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
இந்த பிரச்னை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சிகளின் கருத்தும் கேட்கப்பட்டது. 47 கட்சிகள் கருத்து தெரிவித்தன. காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணமுல் காஙகிரஸ், சமாஜ்வாதி உட்பட 15 கட்சிகள், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 32 கட்சிகள், இது நல்ல யோசனை என ஆதரவு தெரிவித்துள்ளன. பலமுறை நினைவூட்டல் அனுப்பியும், 15 கட்சிகள் எந்த கருத்தும் கூறவில்லை.
கருத்து தெரிவித்தவர்களில் 85 சதவீதம் பேர் ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இந்த திட்டத்தை அடுத்து, வரவிருக்கும் ஏதேனும் ஒரு லோக்சபா தேர்தலில் இருந்து செயல்படுத்தலாம். அந்த ஆண்டில் லோக்சபாவுடன் அனைத்து சட்டசபைகளின் ஆயுட்காலமும் முடிவுற்றதாக கணக்கிட வேண்டும். இதன் விளைவாக, சில மாநில சட்டசபைகள் ஐந்தாண்டு காலத்தை முடிக்காமலே கலைக்கப்படலாம்.
லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த வேண்டும். அதற்கான சட்ட திருத்தத்துக்கு மட்டும், பாதிக்கு மேலான மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும்.
லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி ஆகிய மூன்று தேர்தலுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு ஒரே அடையாள அட்டை போதும். அரசியல் சட்டத்தில் இதற்காக சில திருத்தங்கள் செய்ய வேண்டும். அவை, லோக்சபா மற்றும் சட்டசபைகளின் ஆயுட்காலம் சம்பந்தப்பட்டவை. அந்த திருத்தங்களை பார்லிமென்ட் நிறைவேற்றலாம். மாநில சட்டசபைகள் அதை ஏற்று, தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய சட்டரீதியான அவசியம் இல்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

