தேர்தலுக்காக அமெரிக்கா கொடுத்த நிதி; வாங்கியது யார்: காங்., - பா.ஜ., மோதல்
தேர்தலுக்காக அமெரிக்கா கொடுத்த நிதி; வாங்கியது யார்: காங்., - பா.ஜ., மோதல்
ADDED : பிப் 18, 2025 03:01 AM

புதுடில்லி : இந்திய தேர்தலில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வரும், 182 கோடி ரூபாய் நிதியை நிறுத்துவதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா அறிவித்தது.
இதையடுத்து, இந்திய தேர்தல்களில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என, கேள்வி எழுப்பிய பா.ஜ., இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியதாவது:
இந்திய ஜனநாயகத்தில் வெளிநாடுகள் ஊடுருவுவது திட்டமிட்டு நடக்கிறது. சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் தொண்டு நிறுவனம் வாயிலாகவே, இந்தியாவுக்குள் இந்த பணம் வந்துள்ளது.
கடந்த 2012ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, சோரஸின் தொண்டு நிறுவனத்துடன் தலைமை தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்தது.
இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.
பிரதமர் மோடியின் ஆலோசகரான சஞ்சீவ் சன்யால், ''ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்கா அனுப்பிய பணத்தை இந்தியாவில் பெற்றவர் யார் என, தெரிய வேண்டும். வரலாற்றில் இதுவரை இல்லாத பெரிய முறைகேடு இது,'' என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா நேற்று கூறுகையில், ''மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது, யு.எஸ்.ஏ.ஐ.டி., நிதியை தலைமை தேர்தல் கமிஷன் வாங்கியதாக கூறுகின்றனர்; வெளிநாட்டு சக்திகளிடம் பணத்தைப் பெற்று, தேர்தல் நடைமுறைகளை காங்கிரஸ் சீரழித்தது என்கின்றனர்.
''ஆனால், 2014 தேர்தலில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது எப்படி? சோரஸ் வாயிலாக அமெரிக்க நிதியை பா.ஜ.,வினர் பெற்றனர் என எடுத்துக் கொள்ளலாமா,'' என்றார்.

